பிரபல சமையற்கலைஞர் செஃப் தாமுவின் மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர் அக்டோபர் 25 அன்று காலமானார். 72 வயதான அவரது மறைவு சமையல் துறைக்கு மட்டுமல்ல, தமிழ் பாரம்பரிய உணவுகளை நேசிக்கும் அனைவருக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.செஃப் தாமு என்று பரவலாக அழைக்கப்பட்ட கே. தாமோதரன், பாரம்பரியத் தமிழ் உணவுகளைப் பிரபலப்படுத்தியதில் முன்னோடியாக விளங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சமையல் கலையை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சென்றார்.
குறிப்பாக குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று, ‘தாமு அப்பா’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். அவரது நகைச்சுவையான அணுகுமுறையும், சமையலில் உள்ள ஆழமான அறிவும் பல இளைஞர்களை இந்தத் துறையில் ஈர்த்தன.சமையற்கலைஞராக மட்டுமல்லாமல், ஆசிரியர், எழுத்தாளர் எனப் பல்வேறு துறைகளிலும் அவர் பங்களித்தார். பல சமையல் நூல்களை எழுதி, தமிழ் உணவுகளின் நுணுக்கங்களை ஆவணப்படுத்தினார்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையற்கலைஞர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 2010 ஆம் ஆண்டில் தனிநபர் சமையல் மாரத்தானில் கின்னஸ் உலக சாதனை படைத்தார். 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து 617 வகையான உணவுகளைத் தயாரித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 2025 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.அவரது மறைவுக்குப் பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது... காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது? பிரதமர் மோடி கிண்டல் பதிவு!
இந்தச் சூழலில், அவரது மனைவி வி.டி. உஷாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். பாரம்பரியத் தமிழ் உணவுகளைப் பிரபலப்படுத்தியதுடன், சமையற்கலைஞர், ஆசிரியர், எழுத்தாளர் எனப் பல்வேறு துறைகளில் பங்களித்த செஃப் தாமுவின் மறைவு வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் அவரது குடும்பத்திற்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!