சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும், நேற்று மீண்டும் மைக்செட் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற காவல்துறையினர் மீதும் ஆபாசமாகப் பேசி, அவதூறாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து மோதல் அதிகரித்ததால், காவல்துறையினர் தடியடி நடத்தும் சூழலும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.3 கோடிக்கு தங்க நெக்லஸா? ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை! அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்!
மேலும், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்படாததால் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, அப்பகுதியில் ஒருவரையொருவர் நோக்கிக் கற்களை வீசித் தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதி கலவரப் பகுதியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
மோதலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஏடிஎஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொடர்ந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், நமஸ்கரித்தான்பட்டியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது
இதையும் படிங்க: 2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!