பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காளத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தின் இடையே ஜார்கிராம் பகுதியில் சாலையோர கடையில் நின்று பிரபல ஜல்முரி (Jhalmuri) சிற்றுண்டியை ருசி பார்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி உள்ளது.
மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்தில் நான்கு இடங்களில் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார். ஜார்கிராம் பகுதியில் பிரசாரத்துக்கு செல்லும் வழியில், தனது காரை நிறுத்திய பிரதமர், சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய கடைக்கு சென்றார்.
அங்கு மேற்கு வங்காளத்தின் பிரபலமான தெரு உணவான ஜல்முரியை வாங்கி ருசி பார்த்தார். கடை உரிமையாளருடன் சில நிமிடங்கள் உரையாடிய மோடி, “பாய், ஹமே அப்னா ஜல்முரி கிலாவ்” என்று கேட்டு, விலையை விசாரித்தார். பிறகு பணம் கொடுக்க முயன்றபோது கடைக்காரர் மறுத்தார். ஆனால் பிரதமர் வற்புறுத்தியதால், அவர் பணத்தை வாங்கிக் கொண்டார். இந்த சம்பவத்தின்போது பிரதமர் உள்ளூர் மக்களுடனும், குழந்தைகளுடனும் இலகுவாக பேசியதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: மம்தா, சுவேந்து அதிகாரியை சமாளிக்க ராகுல்காந்தி ப்ளான்!! மேற்குவங்கத்தில் 7 தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் மாற்றம்!!
ঝাড়গ্রামে ঝালমুড়ি খাবার বিরতি! pic.twitter.com/t0TcDeONxt
— Narendra Modi (@narendramodi) April 19, 2026
ஜல்முரி என்பது பொரி, கடலை, வெங்காயம், வெள்ளரி, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பல்வேறு மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் காரமான சிற்றுண்டி ஆகும். மேற்கு வங்காளத்தில் மிகவும் பிரபலமான இந்த உணவை பிரதமர் ரசித்தது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து, “ஜல்முரி பிரேக் இன் ஜார்கிராம்!” என்று குறிப்பிட்டார். “நான்கு பிரசாரக் கூட்டங்களுக்கு இடையே ஜார்கிராமில் சுவையான ஜல்முரியை ருசி பார்த்தேன்” என்றும் அவர் பதிவிட்டார்.
இந்த எளிய, மக்களோடு ஒன்றிய தருணம், தேர்தல் பிரசாரத்தின் இடையே பிரதமரின் மக்கள் நட்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் கட்சிக்கு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!