சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த பகுதி நக்சல்களின் ஒரு முக்கிய மையமாக அறியப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களோடு தெலுங்கானா காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. அப்போது நடந்த என்கவுன்ட்டரில் 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் நக்சல் அமைப்பின் தலைவன் நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜும் ஒருவர்.

68 வயதான இவர், மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 1970களில் இருந்தே நக்சல் இயக்கத்தில் பசவராஜ் இருக்கிறார். தெலுங்கானாவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜியன்னாபேட்டாவைச் சேர்ந்த இவர், பல்வேறு சதி வேலைகளுக்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ளார். இவர் குறித்து தகவல் அளித்தால், ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ., மற்றும் சத்தீஸ்கர் அரசு அறிவித்து இருந்தது. இவரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் தேடி வந்த நிலையில் இவரை சுட்டுக் கொன்றது நக்சல் அமைப்புக்கு மிகப்பெரிய பலத்தயடியாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பாக்.-ல் இருந்து ஊடுருவியவர் சுட்டுக்கொலை..! மர்ம பொருளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படையினர்..!

இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், நக்சலைட்டை ஒழிக்கும் போரில் ஒரு மைல்கல் சாதனை. இன்று, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த என்கவுன்டரில், நமது பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுக்கள் 27 பேரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அவர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளரும், நக்சல் இயக்கத்தின் தலைவனுமான நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜுவும் ஒருவன். நக்சலைட்டுக்கு எதிரான இந்தியாவின் மூன்று தசாப்த காலப்போரில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஒருவன் நமது படைகளால் வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறை. நமது பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன்.

ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் முடிந்த பிறகு, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 பேர் சரணடைந்துள்ளனர் என்பதையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மார்ச் 31, 2026க்கு முன்பு நக்சலைட்டை ஒழிக்க பாஜக, அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தள பக்கத்தில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பெற்ற வெற்றிக்காக நமது படைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் நக்சலைட் அச்சுறுத்தலை ஒழித்து மக்களுக்கு அமைதி, முன்னேற்ற வாழ்க்கையை உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்கவுண்டர் விவகாரம்... சென்னை கமிஷனர் அருணால் டிஜிபி-க்கு சிக்கல்..! பறந்த நோட்டீஸ்..!