மக்களவையில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த மாபெரும் விவாதம் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்திய பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர், கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்டது. இந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி, தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா எந்த எல்லைக்கும் செல்ல தயார் எனவும், ஆபரேஷன் சிந்தூர் தற்போது இடைநிறுத்தப்பட்டாலும், பாகிஸ்தான் எந்தவொரு விரோத செயலிலும் ஈடுபட்டால் மீண்டும் தொடங்கப்படும் எனவும் எச்சரித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாலை 7 மணியளவில் மக்களவையில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாதத்தில் பங்கேற்று, இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்.. குறிவைத்து வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்..!
எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, பஹல்காம் தாக்குதலில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை கேள்வி எழுப்பினர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது பங்கு இருப்பதாக கூறியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை மோடி-டிரம்ப் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தினார். இந்த விவாதம், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் உறுதியான எதிர்-தீவிரவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி, உளவுத்துறை தோல்விகளை சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து முக்கிய உரையாற்றினார். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் 100% வெற்றி பெற்றதாகவும், இந்திய ராணுவத்தின் பலத்தை உலகுக்கு எடுத்துக்காட்டியதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை 22 நிமிடங்களில் முழுமையாக வெற்றியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் காட்டுவோம் என்ற பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. எப்போது, எங்குத் தாக்குதல் நடத்தலாம் என்ற முடிவை ராணுவமே எடுத்தது என்று தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனியும் எடுபடாது என்ற அவர், இந்தியா இனியும் அதற்கெல்லாம் பயப்படாது என்றும் பாகிஸ்தானின் ஏர் பேஸ்கள் இன்னும் ஐசியுவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மோடி, இந்தியப் பெண்களின் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை தாமே தேர்ந்தெடுத்ததாகவும், இதில் பெண் ராணுவ அதிகாரிகள் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பையும், சமூக சீர்திருத்தத்தையும் வலுப்படுத்துவதாக கூறினார்.
மாநிலங்களவையிலும் இன்று இவ்விவகாரம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இந்த உரை, ஆபரேஷன் சிந்தூரின் நோக்கங்கள், செயல்பாட்டு திட்டங்கள் மற்றும் அதன் நீண்டகால விளைவுகளை விளக்குவதாக அமைந்தது. இந்த விவாதங்கள் இந்தியாவின் பாதுகாப்பு உத்திகளை மேலும் தெளிவுபடுத்தி, தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எதுக்கு இவ்வளவு பயம்? ட்ரம்பை பார்த்தால் சுருங்கும் மோடி!! வறுக்கும் திரிணாமுல் காங்., எம்.பி!!