பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 14-ஆம் தேதி தனது பழைய அலுவலகத்தை விட்டு, சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான புதிய அலுவலகத்துக்கு மாற உள்ளார். தற்போது பழைய பாராளுமன்ற அருகே உள்ள தெற்கு பிளாக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் பிரதமர் அலுவலகம், சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக முழுமையாக புதிய கட்டடத்துக்கு மாற்றப்படுகிறது.
சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டம் என்பது டெல்லியில் உள்ள பாராளுமன்றம், துணை ஜனாதிபதி இல்லம், மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளை நவீனமாக்கும் மிகப்பெரிய திட்டமாகும். இதற்காக மத்திய அரசு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2,26,203 சதுர அடி பரப்பளவில் மூன்று முக்கிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டடமான ‘சேவா தீர்த்தம்-1’ தான் பிரதமர் அலுவலகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் நவீன வசதிகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிரம்மாண்டமான விழா அறைகள் உள்ளன.
இதையும் படிங்க: டீன் ஏஜ் காதலில் சிக்கும் இளசுகள்! போக்சோ வழக்கில் புதிய மாற்றம்! வந்தாச்சு ரோமியோ ஜூலியட் பிரிவு!

இரண்டாவது கட்டடமான ‘சேவா தீர்த்தம்-2’ அமைச்சரவை செயலகத்துக்கு (Cabinet Secretariat) ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மூன்றாவது கட்டடமான ‘சேவா தீர்த்தம்-3’ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அலுவலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு (NSCS) ஒதுக்கப்பட்டுள்ளது.
பழைய தெற்கு பிளாக் கட்டடம் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் வகையில், புதிய கட்டடம் நவீன தொழில்நுட்பத்துடன் இந்திய பாரம்பரிய கட்டிடக்கலையும் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஜனவரி 14-ஆம் தேதி புதிய அலுவலகத்துக்கு மாறுவது, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றம், இந்தியாவின் தலைநகரின் நிர்வாக அமைப்பை மேலும் நவீனமாக்கும் மற்றும் திறம்பட செயல்பட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அருவருப்பா இல்லையா முதல்வர் ஸ்டாலின்? இது பொதுமக்களின் உயிர்!! அண்ணாமலை ஆவேசம்!