வட இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் இமாசல பிரதேசத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் பருவமழையால் சட்லெஜ், பியாஸ், ரவி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால், பஞ்சாபில் 23 மாவட்டங்களில் 1,655 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், பதான்கோட், ஹோஷியார்பூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர், 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.75 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன, 19,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெலியேற்றப்பட்டனர். 1988-க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளமாக இது கருதப்படுகிறது. மாநில அரசு இதனை பேரிடராக அறிவித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாட புத்தகத்தில் ISRO வரலாறு!! தொலைநோக்கு பார்வைக்கு சரியான எடுத்துக்காட்டு!
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (செப்டம்பர் 9) நாளை பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் பகுதிக்கு நேரில் சென்று வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் துயரங்களைக் கேட்டறிந்து உரிய நிவாரண நடவடிக்கைகளை உறுதி செய்வார் என பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாக்கர் தெரிவித்தார்.
மேலும், இரண்டு மத்தியக் குழுக்கள் வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளன. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு முழு உதவி வழங்கும் என உறுதியளித்தார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இமாசல பிரதேசத்தில், கடந்த இரு மாதங்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டு 366 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதேபோன்று, அரசு சொத்துகளில் ரூ.4,006 கோடி மற்றும் தனியார் சொத்துகளில் ரூ.67 கோடியும் பாதிக்கப்பட்டு உள்ளன.

மொத்தம் ரூ.4,079 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 3,390 வீடுகள், 40 குடிசைகளும் சேதமடைந்து உள்ளன. 1,464 கால்நடைகளும், 26,955 பண்ணை பறவைகளும் உயிரிழந்து உள்ளன. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை இமாசல பிரதேசத்திற்கும் நேரில் சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.
இதையும் படிங்க: டெல்லியில் எம்.பி.களுக்கான சொகுசு அபார்ட்மெண்ட்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!