புதுடெல்லி: இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர், இரு நாடுகளின் உறவு மற்றும் உலகளாவிய அரசியல் சூழல் குறித்து பேசியுள்ளார். மோடியைத் தனது நண்பர் என்று குறிப்பிட்ட டஸ்க், உலக அரங்கில் இந்தியா வகிக்கும் முக்கியப் பங்கையும் பாராட்டியுள்ளார்.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி போலந்துக்குச் சென்றிருந்தபோது விடுத்த அழைப்பை ஏற்று டொனால்ட் டஸ்க் இந்தியா வந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது குறித்து ஆலோசனைகள் நடைபெறுகின்றன. 2024ஆம் ஆண்டு மோடியின் போலந்து பயணத்தின்போது, இருதரப்பு உறவு உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1925-ல் தொடங்கிய ஆர்எஸ்எஸ்!! 100 ஆண்டுகள் நிறைவு! மோகன் பாகவத்தின் உரைக்கு மோடி பாராட்டு!
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, பசுமை எரிசக்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

சந்திப்புக்குப் பிறகு பேசிய டொனால்ட் டஸ்க், உலக அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்டார். இந்தியா போன்ற பெரிய நாட்டை மோடி வழிநடத்துவது நம்பிக்கையளிப்பதாகக் கூறிய அவர், மோடியைத் தனது நண்பர் என்று அழைப்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.
கடந்த 35 ஆண்டுகளில் இந்தியாவும் போலந்தும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இரு நாடுகளின் வளர்ச்சியும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் டஸ்க் குறிப்பிட்டார்.
டஸ்குடன் போலந்து நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் அண்ட்ரேய் டோமான்ஸ்கி உள்ளிட்டோர் இந்தியா வந்துள்ளனர். டில்லியில் நடைபெறும் இந்தியா–போலந்து வர்த்தக மன்றத்தைத் தொடர்ந்து, போலந்து குழுவினர் பெங்களூருவுக்கும் செல்ல உள்ளனர். அங்கு தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளனர்.
இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுடன், இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!