பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற 12-வது ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது இந்திய அணியின் நான்காவது ஆசிய கோப்பை வெற்றியாகும், இதற்கு முன் 2017-ல் மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் 2026-ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடியது. முதல் நிமிடத்திலேயே சுக்ஜித் சிங் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். 28-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் சஞ்சய் இணைந்து கடத்திய பந்தை தில்பிரீத் சிங் கோலாக்கினார். முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்ற இந்தியா, 45-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங்கின் இரண்டாவது கோலாலும், 50-வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸின் பெனால்டி கார்னர் கோலாலும் 4-0 என்று முன்னிலையை வலுப்படுத்தியது.
இதையும் படிங்க: செமிகான் மாநாட்டின் 2வது நாள்.. Nano சிப்களை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி..!!
தென் கொரிய அணி 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும், இந்தியாவின் தடுப்பாட்டம் அவர்களை மேலும் முன்னேறவிடவில்லை. இந்த வெற்றி இந்திய ஹாக்கி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சூப்பர்-4 சுற்றில் சீனாவை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் ஒற்றுமையும், திறமையும் உலக அரங்கில் இந்திய ஹாக்கியின் மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பை ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், “ஆசிய கோப்பை ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் வெற்றி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம். வீரர்களின் திறமை, விடாமுயற்சி மற்றும் குழுப்பணி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது,” எனப் பாராட்டினார். இந்த வெற்றி இந்திய ஹாக்கி அணியின் உலகளாவிய மேலாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இதையும் படிங்க: ஆப்கான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800ஆக உயர்வு..! பிரதமர் மோடி இரங்கல்..!!