காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்ச நீதமன்றம் தள்ளுபடி செய்து கடுமையாகச் சாடியது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பதிலடியாக பாகிஸ்தானுடன் தூதரக உறவுகளை ரத்து செய்தது, எல்லைகளை மூடியது, அந்நாட்டு மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றியது மத்தியஅரசு. சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, கப்பல் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, வர்த்தக உறவுகளையும் மத்திய அரசு துண்டித்தது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்திய கப்பல்களுக்கு பாக். துறைமுகத்துக்குள் நுழையத் தடை..!
இந்த தாக்குதல் தொடர்பாக என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த தாக்குதலுத்து பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு அதிகாரம், சுதந்திரம் வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த சூழலில், வழக்கறிஞர் விஷால் திவாரி மூலம் பொது நலன் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “ ஜம்மு காஷ்மீர் போன்ற மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவிடக் கோரி இருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், என் கோடீஸ்வர் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் விஷால் திவாரியிடம் நீதிபதிகள் “ இந்த பொதுநலன் மனு உண்மையில் பொதுநலத்தோடு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த மனுவின் உண்மையான நோக்கம் என்ன, உங்களுக்கு என்ன தேவை, இந்த விவகாரத்தின் முக்கியத்துவம், உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியாதா இந்த பொதுநலன் மனுத் தாக்கல் செய்ததன் மூலம் நீங்கள் பெரிய அபராதத்தைச்சந்திக்கப் போகிறீர்கள்” என எச்சரித்தார்.

அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் திவாரி “ முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு பாதுகாப்புதான் கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு “ இந்த மனுதாரர் தொடர்ந்து இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதன் நோக்கம் விளம்பரம்தான், மக்களின் நலன் நோக்கமல்ல” எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட வழக்கறிஞர் “அரசுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பியுங்கள் என்று கேட்கவில்லை. அடுத்துவரும் அமர்நாத் யாத்திரைக்கு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று கேட்கிறேன்” என்றார். ஆனால், நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து வழக்கறிஞரை எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: எங்கள மீறி தொடுடா பாக்கலாம்.! களம் இறங்கிய கமோண்டோக்கள்.. திருப்பதியில் திடீர் பரபரப்பு..!