புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக (PRTC) ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், நிரந்தர ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், புதுச்சேரி மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன, இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இருப்பினும் தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குவதால் நகரப் பகுதிகளில் பாதிப்பு குறைவாக உள்ளது.

PRTC-யில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளனர், ஆனால் நிரந்தர ஊழியர்கள் 40 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரி ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதற்கு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததால், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள் தலைமறைவு.. பிரபல கடத்தல் மன்னன் சிலுவைராஜ் கைது..!
இதனிடையே பி.ஆர்.டி.சி. மேலாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் எழுத்துப் பூர்வமான உறுதிமொழி கடிதம் கேட்டனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், PRTC மேலாண் இயக்குநர் சிவக்குமார், வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால், எஸ்மா (அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம்) பாயும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்றும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால், பொதுமக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அரசு மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் ரங்கசாமி அட்டகாச அறிவிப்பு..!!