நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் தொடர்ந்து அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து நாடு முழுவதும் கேள்விகள் எழுந்தன. இதையடுத்து மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்திற்கு அரசியல் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வீடியோவில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அங்க ஏன் போகணும்..? ராகுல் போராட்டம் நேர்மையற்றது... சோனம் வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு..!!

மேலும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை ஆலோசித்து வருவதாகவும், வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, தனது சமூக வலைதளப் பதிவில், "பிரதமர் மோடி அவர்களே, நள்ளிரவில் வெளியிடப்பட்ட வீடியோவால் மாணவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அவர்கள் தெளிவான நடவடிக்கையையே எதிர்பார்க்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும், போராட்டத்தில் மாணவர்களை தாக்கியவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும், மாணவர்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதே நேரத்தில், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன என்பதையே மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “நீட் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வாருங்கள்”... ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் நிதின் நபின் சவால்!