காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலானது.

இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடக்கத்தில் பயங்கரவாதிகளின் முகாம்களாக உள்ள உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக பாகிஸ்தானுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது. நாங்கள் ராணுவம் மீது தாக்குதல் நடத்தவில்லை. இதனால் பாகிஸ்தான் ராணுவம் தலையிடாமல் தள்ளி நிற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் அதனை விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

இதையடுத்து கடந்த 17 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், தாக்குதலுக்கு முன்பாகவே அதுபற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம். அரசு இதை செய்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை யார் அங்கீகரித்தார்கள்? இதனால் நம் விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது. அதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த மெசேஜ் அனுப்பப்பட்டது.

ஆனால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்போது இந்த மெசேஜ் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிந்ததால் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம் என்று ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மவுனம் என்பது மிகவும் மோசமானது.
இதனால் நான் மீண்டும் கேட்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிந்ததால் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம். இது தவறு அல்ல. இது குற்றம். இந்த நாடு உண்மையை அறிய தகுதியானதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!