காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலானது. இந்த மோதல் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி குஜராத் ஆதம்பூரில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளைப் பாராட்டினார்.

மேலும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான எஸ் 400 அழிக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் போலி செய்தியைப் பரப்பிய நிலையில், அதைப் பொய் என்பதைக் காட்டும் வகையில் அதே எஸ்400 அருகே நின்று உரையாற்றினார். தற்போது அவரை தொடர்ந்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை அதிகாரிகளைப் பாராட்டியுள்ளார். குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு விமானப்படை அதிகாரிகளை நேரில் பாராட்டினார். ஆபரேஷன் சிந்தூரில் விமானப்படை முக்கிய பங்கு வகித்ததாகவும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

அவர் பேசுகையில், ஆபரேன் சிந்தூர் என்பது வெறும் அலங்காரத்தின் சின்னம் அல்ல. மாறாக துணிச்சல் மற்றும் மன உறுதியின் சின்னம் என்பதை நீங்கள் காட்டியுள்ளீர்கள். இப்போது பயங்கரவாதத்தின் நெற்றியில் சிந்தூர் வரையப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிட்டதே பிரதமர் மோடி தான். இந்திய பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்பம் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது.. பாதுகாப்புப் படை எந்தளவுக்கு நவீனமாக இருக்கிறது என்பதை நீங்கள் உலகிற்குக் காட்டியுள்ளீர்கள்.. இந்தியா இனி மற்ற நாடுகளின் ஆயுதங்களைச் சார்ந்திருக்காது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சக்திவாய்ந்தவை மற்றும் நம்பகமானவை. அவ்வளவு ஏன் பாகிஸ்தான் கூட நமது பிரம்மோஸ் ஏவுகணையின் சக்தியை ஒப்புக்கொண்டுள்ளது.

அதேபோல சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி வழங்கக்கூடாது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறும் பாகிஸ்தான் அதைத் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தான் பயன்படுத்துகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு மீண்டும் நிதி வழங்கும் முன்பு சர்வதேச நாணய நிதியம் இது குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானப்படை வீரத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் போர் உத்தி மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் இப்போது மாறிவிட்டன என்பதை உலகிற்குக் காட்டியது. புதிய இந்தியா வலிமையானது என்ற செய்தியை நீங்கள் முழு உலகிற்கும் காட்டியுள்ளீர்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!