மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் காவலர் மற்றும் வீட்டு உரிமையாளரின் மகன் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட 28 வயது பெண் மருத்துவரின் குடும்பத்தினருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் உரையாடினார்.
பெண் மருத்துவரின் குடும்பம் நீதி கோரி, சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது. ராகுல் காந்தி, "நீதிக்கான போராட்டத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என உறுதியளித்தார்.
அக்டோபர் 23 இரவு, சதாராவின் பால்டான் நகரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் 28 வயது அரசு மருத்துவர் சம்பதா முண்டே தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உள்ளங்கையில் மராத்தி மொழியில் தற்கொலை குறிப்பு எழுதப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: உள்ளங்கையில் வாக்குமூலம்!! பெண் டாக்டர் தற்கொலை வழக்கு! எஸ்.ஐ கைது!
அதில், காவல்துறை ஆய்வாளர் கோபால் பட்னேவும், அவரது வீட்டு உரிமையாளரின் மகன், மென்பொருள் பொறியாளர் பிரசாந்த் பங்கரும் 4-5 மாதங்களாக உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகக் குறிப்பிடப்பட்டது. இதன்படி, அக்டோபர் 25 அன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பட்னே உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். சதாரா போலீஸ் சூபரிண்டெண்டென்ட் துஷார் தோஷி, "வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது. ரேப் மற்றும் தற்கொலைத் தூண்டுதல் குற்றச்சாட்டுகள் உள்ளன" என தெரிவித்தார்.
பெண் மருத்துவரின் குடும்பத்தினர், பீட் மாவட்டத்தின் கவட்கவுன் கிராமத்தில் தங்கியுள்ளனர். அவர்களை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சாப்கல் சந்தித்தபோது, ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார். குடும்பம், " மகள் மரணத்திற்கு பிறகு ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆதாரங்கள் விரைவில் அழிக்கப்படலாம். SIT அமைத்து விரைவு விசாரணை நடத்துங்கள். ஃபாஸ்ட்-டிராக் கோர்ட்டில் விசாரிக்க அழுத்தம் தாருங்கள்" என கோரியது.

ராகுல் காந்தி, "இது தற்கொலை அல்ல, அமைப்பு கொலை (institutional murder). அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது. நான் அழுத்தம் கொடுக்கிறேன். உங்கள் போராட்டத்தில் ஆதரவு தருகிறேன்" என ஆறுதல் கூறினார்.
முன்னதாக, அக்டோபர் 26 அன்று சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி, "மகாராஷ்டிராவின் சதாரா மருத்துவர் சம்பதா முண்டேவின் தற்கொலை, பாலியல் துன்புறுத்தல், ஊழல் அமைப்பின் விளைவு. இது அமைப்பு கொலை. BJP அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது. இந்தியாவின் பெண்களுக்கு நீதி வேண்டும்" என பதிவிட்டார். இதை "அரசியல் தூண்டுதல்" என மகாராஷ்டிர முதல்வர் டேவேந்திர ஃபட்னாவிஸ் விமர்சித்தார். "இந்த உணர்ச்சிகரமான விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என அவர் கூறினார்.
மருத்துவர் சம்பதா முண்டே, சதாரா அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர். துன்புறுத்தல் குறித்து அவர் புகார் கொடுத்தாலும், போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என குடும்பம் கூறுகிறது. மகாராஷ்டிர ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன் (MARD) மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (IMA) போன்ற அமைப்புகள், "பெண் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு சட்டம் அமலாக்க வேண்டும்" என கோரியுள்ளன.
சமூக வலைதளங்களில் #JusticeForSampada ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளது. இந்தச் சம்பவம், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போலீஸ் பாதுகாப்பின்மை குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. குடும்பத்தின் போராட்டம் தொடர்கிறது.
இதையும் படிங்க: தண்ணி கிடைக்குமா? தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!! அத்துமீறிய காமுகன்!! அரங்கேறிய கொடூரம்!