பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தர்பங்கா மற்றும் முசாஃபர்பூரில் நடந்த கூட்டங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல், "மோடி ஓட்டுக்கு டான்ஸ் ஆடுவார்" என்று கிண்டலடித்தார். சட் பூஜைக்கான யமுனை குளிப்பு 'நாடகம்' என்றும் கூறியதால், பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தை தர்பங்காவில் தொடங்கினார். அங்கு அவர் கூறியதாவது: "என்டிஏ கூட்டணி ஆட்சியில் பீகாரின் வளர்ச்சி பின்தங்கியுள்ளது. இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர். பீகார் இளைஞர்கள் உழைப்பில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கடினமாக உழைத்து, படிக்கின்றனர். ஆனால், பணம் படைத்தவர்களுக்கே எல்லாம் சாத்தியம். பணக்கார மாணவர்களுக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே கேள்வித்தாள் கிடைத்துவிடுகிறது. இதனால் உழைத்த மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இங்கு எல்லாம் பணக்காரர்களுக்கே கிடைக்கும்" என்றார்.
தொடர்ந்து, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வரானால், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனக்குழுக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகிய அனைவருக்கும் சம நீதி, சம வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுல் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் உட்பட 16 பேருக்கு கல்தா!! ஆட்சியை தக்க வைக்க நிதிஷ் அதிரடி!! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல்!
பிரதமர் மோடியை "மிகச் சிறந்த நடிகர்" என்று சாடி, "தேர்தல் நேரத்தில் அவரிடம் எதை வேண்டுமானும் எதிர்பார்க்கலாம். 200 பேர் கூடி அவரை நடனம் ஆடச் சொன்னால், மேடையிலேயே பரதநாட்டியம் ஆடுவார். ஓட்டுக்காக டான்ஸ் ஆடத் தயங்கமாட்டார்" என்று கிண்டலடித்தார்.
சட் பூஜை குறித்தும் ராகுல் கடுமையாக விமர்சித்தார். "சட் பூஜை பொழுது யமுனையில் குளிப்பேன் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், யமுனை நீர் அவ்வளவு மாசுபாட்டால் நிறைந்தது. அதை குடித்தால் உடனே உடல் நலம் குன்றும் அல்லது இறந்து போவார். கால் வைத்தாலே பாதிப்பு. ஆனால், மோடி ஒரு சிறிய குளத்தை ஏற்படுத்தி, பைப் மூலம் சுத்தமான நீர் வரவழைத்து யமுனையில் குளிப்பதாக நாடகம் ஆடினார்" என்று கூறினார்.
இதுதான் உண்மையான இந்தியா என்று அவர் சாடினார். "வறுமை, ஏழ்மை, பசி நிறைந்த இந்தியா ஒன்று. அதானி, அம்பானி போன்ற பணக்காரர்களுக்கான இந்தியா மற்றொன்று. இது பாஜகவின் உண்மை முகம்" என்று ராகுல் விமர்சித்தார்.

ராகுலின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "சட் பூஜை மற்றும் பிரதமர் பற்றி ராகுல் அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு அத்துமீறியது. 20 ஆண்டுகளாக காங்கிரஸ்-ஆர்ஜேடியை பீகார் மக்கள் புறக்கணித்துள்ளனர். தோல்வி பயத்தில் ராகுல் உளறுகிறார். ஏற்கனவே மோடியின் தாயை தரம் தாழ்ந்து விமர்சித்தனர். இப்போது பிரதமரை இழிவாகப் பேசியுள்ளனர். இது கண்டத்திற்குரியது" என்றார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "ராகுல் காந்தி சட் பூஜையை இழிவுபடுத்தியுள்ளார். இது சனாதன தர்மத்திற்கு அவமானம். பீகார் மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள்" என்று கூறினார்.
பாஜக தலைவர் அமித் மல்வியா, "ராகுல் சட் பூஜை, யமுனை, பீகார் கலாச்சாரத்தை இழிவுபடுத்தியுள்ளார்" என்று குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி அக்டோபர் 30 அன்று முசாஃபர்பூரில் நடந்த கூட்டத்தில், "பீகார் சட் பூஜையை இழிவுபடுத்தியவர்களை மறக்காது" என்று பதிலடி கொடுத்தார்.
இந்த சர்ச்சை, பீகார் தேர்தல் களத்தில் சூட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி தேஜஸ்வி யாதவ்-ராகுல் சேர்க்கை, ஓட்டு திருட்டு, ஜங் ராஜ் போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. NDA-வின் நிதிஷ் குமார்-மோடி பிரச்சாரம் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மீது கவனம் செலுத்துகிறது.
இந்தப் பேச்சு, தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பீகார் மக்கள் சட் பூஜை உணர்வுகளை மதிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. ராகுலின் விமர்சனங்கள், இளைஞர்கள், ஏழைகளிடம் ஆதரவைப் பெறலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் நடுவில் வெளியாகும்.
இதையும் படிங்க: பீகார் தேர்தலில் குடுமிபிடி சண்டை! எதிர்கட்சிகளுக்கும் முற்றும் மோதல்! ராகுல் Vs தேஜஸ்வி!