பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க 2 நாள் முன்பு நள்ளிரவில் நம் ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கிருந்த பயங்கரவாதிகளின் தலைமை இடம் உட்பட 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. இந்த அட்டாக்கில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உட்பட மொத்தம் 100 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ நிலைகளை நாம் குறிவைக்கவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதிகள் முகாம்களை தான் தகர்த்தோம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் பதிலடி இதோடு முடிந்து விட்டது. பாகிஸ்தானும் இதை புரிந்து கொண்டு அமைதி காத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி செய்யவில்லை. அன்று பகல் முடிந்து இரவு வந்ததும் தனது வேலையை காட்டியது. காஷ்மீர் முதல் ராஜஸ்தான் வரை எல்லையில் இருந்த 15 நகரங்களை குறி வைத்து ட்ரோன், ஏவுகணைகளை அனுப்பி குண்டு வீசியது. அவை நம் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே நம் வான் பாதுகாப்பு கவசங்கள் இடைமறித்து அழித்து விட்டன.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.. காஷ்மீர் விரைந்தது NIA.. உச்சக்கட்ட பரபரப்பு..!

இப்போது பாகிஸ்தான் நம்மை தாக்கி இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்தது. உடனே இஸ்ரேல் நமக்கு தந்த ஹார்பி ரக ட்ரோன்களை கொத்து கொத்தாக அனுப்பி அதே இரவில் பதிலடி கொடுத்தது இந்தியா. லாகூரில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் குறி வைக்கப்பட்டன. வான் பாதுகாப்பு கவசம் உடைத்து நொறுக்கப்பட்டது. லாகூர் கிரிக்கெட் மைதானத்திலும் குண்டு விழுந்தது. இதில் பாகிஸ்தானுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. பதிலுக்கு பதில் சரியாக போய் விட்டது என்று பாகிஸ்தான் விட்டிருக்கலாம்.

இந்த முறையும் அதை செய்யவில்லை. பதிலடிக்கு பதிலடி என்ற பெயரில் நேற்று இரவு வேலையை காட்டியது. சரியாக 8:45 மணி முதல் 9:20 வரை இந்தியாவின் 3 மாநிலங்களை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, ட்ரோன்களை ஏவி குண்டு வீசியது. ஆனால் இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்பதை 3 மணி நேரம் முன்பே நம் உளவுத்துறை மோப்பம் பிடித்து ராணுவத்தை உஷார் செய்திருந்தது. இதனால் ஏற்கனவே எல்லை பகுதியில் இருந்த ரஷ்யாவின் S-400, ஆகாஷ், MRSAM மற்றும் Zu-23 உள்ளிட்ட ஏவுகணை, ட்ரோன் தடுப்பு கருவிகளை இந்தியா ஆக்டிவேட் செய்திருந்தது.

இதனால் எல்லைக்குள் புகுந்த ட்ரோன்கள், ஏவுகணைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு வீழ்த்தப்பட்டன. ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவ நிலைகளை குறி வைத்தும், முக்கியமான குடியிருப்பு பகுதிகளை குறி வைத்தும் ட்ரோன்கள் அனுப்பப்பட்டு இருந்தன. ஜம்மு ஏர்போர்ட்டிலும் ஒரு ட்ரோன் குண்டு வீசியது. அனைத்து ட்ரோன்களையும் இந்தியா வானிலேயே இடைமறித்து அழித்தது. மொத்தம் 50 ட்ரோன்களை தகர்க்கப்பட்டன. இவை இல்லாமல் மொத்தம் 8 ஏவுகணைகளை இந்தியா இடைமறித்து அழித்தது. முக்கியமாக, பாகிஸ்தான் அனுப்பிய F-16 ரக போர் விமானம் ஒன்று, சீனா, பாகிஸ்தான் சேர்ந்து தயாரித்த JF-17 ரக போர் விமானங்கள் 2 என மொத்தம் 3 போர் விமானங்களையும் இந்தியா சுட்டு பொசுக்கியது.

இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது. இப்போதும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டில்லியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை நடத்தியது.குறிப்பாக இஸ்லாமாபாத் நகரில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்கியது. அங்கு மட்டும் 14 இடங்கள் தீக்கிரையாகின.

அதே போல் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் நம் வீரர்கள் குண்டு வீசினர். இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சேதம் விவரம் உடனடியாக வரவில்லை.பாகிஸ்தானுக்கு நம் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று இரவு 35 நிமிடம் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதலில் இந்தியாவுக்கு பொருட்கள் சேதமா, உயிர் சேதமோ ஏற்படவில்லை. தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து விட்டோம். தீய சக்திகள் வாலாட்டினால் பலத்தை காட்டி உரிய பதிலடி கொடுப்போம் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். டெல்லி பிரதமர் அலுவலத்தில் உள்ள சவுத் பிளாக் பகுதியில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிப்பாதி, ராணுவ ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படை தளபதி மார்ஷல் ஏபி சிங் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பில், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பது முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
இதையும் படிங்க: இந்தியா எங்க சகோதரன்..! பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு.. கொக்காரிக்கும் இஸ்ரேல் வீராங்கனைகள்..!