அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் டிருடம் இபிசி இந்தியா மற்றும் டிவிஎச் என்ற கட்டுமான நிறுவனங்களின் இயக்குனராக உள்ளார். இவர்களது குடும்பத்தினர், குறிப்பாக கே.என்.நேருவின் மகன் அருண் நேரு மற்றும் மற்றொரு சகோதரர் கே.என்.மணிவண்ணன் ஆகியோரும் இந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளனர்.

2013-ல், டிருடம் இபிசி இந்தியா நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து காற்றாலை திட்டத்திற்காக ரூ.30 கோடி கடன் பெற்றது. இந்தக் கடனுக்கு கே.என்.ரவிச்சந்திரன் உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த நிலையில், இந்தக் கடன் தொகையை டிவிஎச் நிறுவனம் மற்றும் அதன் சகோதர நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வங்கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புகார் அளித்தது.
இதையும் படிங்க: எங்க இருந்து அதிகாரம் வந்துச்சு? ஆட்டம் காட்டிய அமலாக்கத்துறை.. குட்டுவைத்த நீதிமன்றம்..!

மேலும், டிவிஎச் நிறுவனம் முறையாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்கவில்லை என்றும், வருமானத்தை குறைத்து காட்டியதாகவும் 2018-ல் வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த முறைகேடுகள் தொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புகாரின் அடிப்படையில், 2021-ல் சிபிஐ., கே.என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீதான சிபிஐ தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும் மோசடி எதுவும் நடைபெறவில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட சிபிஐ வழக்கை நிபந்தனையோடு நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு அமைச்சரா இப்படி தான் பேசுவாங்களா? வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்.. உயர்நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை..!