இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கைகள் பெரிய தடையாக இருக்காது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியின் (IMF) வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் உள்நாட்டு சந்தை வலிமையை வலியுறுத்தினார். உலகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், கடந்த ஆண்டு இந்தியா 8 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: "இந்திய பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டு தேவையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் நமக்கு குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தாது.
இதையும் படிங்க: முடிவுக்கு வருமா வரி வர்த்தக போர்! இந்திய குழு அமெரிக்கா பயணம்!
கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரால் ஏற்பட்ட உலகளாவிய பாதிப்புகளிலிருந்து இந்தியா விரைவாக மீண்டுள்ளது." அமெரிக்காவின் வரி உயர்வு சர்வதேச வர்த்தகத்தை சீர்குலைத்து, பல நாடுகளின் வளர்ச்சியை பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணவீக்க கட்டுப்பாட்டில் இந்தியாவின் வெற்றியையும் அவர் பாராட்டினார். "பணவீக்கம் 8 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத சாதனை. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதால் இது சாத்தியமானது" எனத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்ற நாட்டு கரன்சிகளைப் போல அதிகம் வீழ்ச்சியடையவில்லை எனவும் சொன்னார். இது இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
இந்த அறிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரி கொள்கைகளால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதற்கு மத்தியில் இந்தியாவின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
சந்தை நிபுணர்கள், இந்தியாவின் உள்நாட்டு தொழில் முன்னேற்றம், டிஜிட்டல் பொருளாதாரம், உள்நாட்டு நுகர்வோர் தேவை ஆகியவை வளர்ச்சியைத் தக்கவைக்கும் எனக் கருதுகின்றனர். ஆர்பிஐவின் இந்த நிலைப்பாடு, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இனி இந்தியா இன்னும் வேகமா முன்னேறும்!! ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்! அமித் ஷா சொல்லும் பாயிண்ட்!