உலக நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சுழலும் பணத்தின் அளவைக் குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தும் போக்கில் உள்ளன. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அண்மையில் வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இதே போன்ற நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தற்போது இந்திய வங்கி அமைப்பில் அதிகப்படியான பணப்புழக்கம் இருந்தாலும், விலைவாசி உயர்வு அபாயங்கள் அதிகரித்துள்ளன. இந்தப் பின்னணியில், 2026 டிசம்பர் இறுதிக்குள் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இரண்டு முறை, மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
அக்டோபர் மாதம் நடைபெறும் பணவியல் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்வும், தொடர்ந்து டிசம்பரில் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்வும் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் தற்போதைய 5.25 சதவீத ரெப்போ விகிதம் 6 சதவீதத்தை எட்டும். சர்வதேச சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பால் பணவீக்கம் உயர்கிறது. இது மக்களின் வாங்கும் திறனைப் பாதிக்கிறது. எனவே விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் பணப்புழக்கத்தைக் குறைக்க முயல்கின்றன.
இதையும் படிங்க: ஏர்போர்ட் நிர்வாக மாற்றம் எதற்கு.? பதில் சொல்லுங்க CM..! வானதி சீனிவாசன் கேள்வி.!!
அமெரிக்காவின் பெடரல் வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவற்றுடன் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த நோக்கில் செயல்படுகிறது. பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும்போது மத்திய வங்கிகள் ரெப்போ விகிதத்தை உயர்த்தும். இதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி உயரும். சேமிப்புக்கான வட்டியும் அதிகரிக்கும்.

இதனால் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், நகைக்கடன், வணிகக்கடன், நுகர்வோர் கடன் உள்ளிட்ட அனைத்து வகைக் கடன்களுக்கும் வட்டி விகிதம் உயரும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்வதை மக்கள் தவிர்ப்பர். அதிக பணம் உள்ளவர்கள் வங்கியில் சேமிக்க விரும்புவர். இதனால் சந்தையில் தேவை குறைந்து, விலைவாசி படிப்படியாகக் கட்டுக்குள் வரும்.
கடைசியாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 2023 பிப்ரவரியில் உயர்த்திய பிறகு, படிப்படியாகக் குறைத்து தற்போது 5.25 சதவீதத்தில் வைத்துள்ளது. ஆனால் தற்போதைய பணவீக்க அபாயங்கள், வலுவான பணப்புழக்கம் மற்றும் உலகளாவிய வட்டி உயர்வு போக்கு ஆகியவை கடினமான முடிவைத் தள்ளக்கூடும்.பொருளாதார வளர்ச்சி மற்றும் விலை நிலைத்தன்மைக்கு இடையே சமநிலையைப் பேணுவதும், பணப்புழக்கத்தைப் பணவீக்க இலக்குகளுடன் இணக்கமாக்குவதும் ரிசர்வ் வங்கிக்கு இப்போது உள்ள பெரிய சவால்.
மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டால், கடன் பெறும் தகுதிகள் கடுமையாகும். இது முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும். கடன் வாங்கியவர்களின் மாதாந்திர தவணைகள் (ஈஎம்ஐ) உயரும். புதிய கடன் வாங்குவோருக்குச் செலவு அதிகரிக்கும். அதேநேரம் சேமிப்பு வட்டி உயர்வால் டெபாசிட் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி அக்டோபர் 5-7 தேதிகளில் நடைபெறும் அடுத்த எம்பிசி கூட்டத்தில் முதல் அறிகுறிகளைத் தெரிவிக்கலாம் என்று சந்தை கண்காணிக்கிறது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பணவீக்கம் மற்றும் பிற அழுத்தங்கள் தொடர்ந்தால், இந்த உயர்வு தவிர்க்க முடியாததாக மாறக்கூடும். மக்கள் தங்கள் கடன் திட்டங்களை மறுபரிசீலனை செய்து, அவசரமற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
இதையும் படிங்க: 2027-ல் புதிய அரசியல் கட்சியா? அண்ணாமலையின் அடுத்த நகர்வு! நாடாளுமன்ற தேர்தலுக்கு டார்கெட்!!