நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 176 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இப்ப புரியுதா..! இந்தியாவுக்கு ரஷ்யா- பாகிஸ்தானுக்கு சீனா..!
அதேவேளை, 15ம் தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இந்நிலையில், புதின் அழைப்பை உக்ரைன் ஏற்றது. பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்துகொண்டால், தான் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். மேலும், ரஷ்யா தரப்பில் பங்கேற்கும் குழு அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

மே 15ம் தேதி வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என புடின் அழைப்பை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். அதன்படி, துருக்கியின் அங்காராவில் உக்ரைன், ரஷியா இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்கிறார்.

இந்நிலையில், ரஷ்யா தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் அதிபர் புதினின் ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், துணை வெளியுறவு அமைச்சர், துணை பாதுகாப்புத் துறை அமைச்சர், ராணுவ தலைமை தளபதி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இது குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவிலிருந்து யார் வருவார்கள் என்பதைப் பார்க்க நான் காத்திருக்கிறேன், பின்னர் உக்ரைன் எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன். துருக்கியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

ரஷ்யா போரையும், கொலைகளையும் நீட்டித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சும்மா இறங்கி அடிங்க.. இந்தியாவுக்கு ஃபுல் சப்போர்ட்.. ரஷ்யா, ஜப்பான் வரிசையில் அமெரிக்கா..!