தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்த ஜந்தர் மந்தர் போராட்டம், தலைநகரை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
அமைதியான வழியில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், ஆனால் அனுமதியின்றி நடத்துவது சட்டவிரோதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேநேரம், மெட்ரோ நிலையங்களை முழுமையாக மூடுவது பொதுமக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் என்பதால், போக்குவரத்து சேவைகளை முழுக்க முடக்கக்கூடாது; ஒழுங்குபடுத்தி இயக்க வேண்டும் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருந்தபோதிலும், டெல்லி போலீஸ் மற்றும் மெட்ரோ நிர்வாகம் பல நிலையங்களை மூடி, ரயில் சேவைகளையும் ரத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!
இந்த வழக்கை விசாரிக்க நாளை (அக்டோபர் 11) ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடுகிறது. நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி. மோகனா அடங்கிய அமர்வு இந்த அவசர விசாரணையை நடத்தவுள்ளது. மனுவில் மத்திய உள்துறைச் செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனர், மெட்ரோ தலைவர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் மும்பையிலிருந்து விமானம் வழியாக டெல்லி வந்தடைந்தனர். விமானம் தரையிறங்கியதும், பெண் போலீசார் உள்ளிட்ட குழு விமானத்துக்குள் நுழைந்து அவர்களை நேரடியாக கைது செய்தது. கைது செய்யப்பட்ட இடம் குறித்த தகவல் தெரியாததால், மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் நாளை சிறப்பு அமர்வில் அவசரமாக விசாரணைக்கு வருகிறது.
தேர்தல் பட்டியல் திருத்தம் தொடர்பான சர்ச்சைகளால் தொடங்கிய இந்த போராட்டம், இப்போது நீதிமன்ற உத்தரவு மீறல் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!