ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி கடற்கரைப் பகுதியில் புலம்பெயர்ந்த அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 116-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜிபூட்டியிலிருந்து ஏமன் நாட்டை நோக்கிப் புலம்பெயர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட படகு ஒன்று, கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி இரவு ஒபோக் நகருக்கு வடக்கே உள்ள குஹெரே (Guhere) கடற்கரைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நடுக்கடலில் தத்தளித்தவர்களில் 80-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில் தப்பியவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கோர விபத்து குறித்து ஜிபூட்டிக்கான ஐ.ஓ.எம் தூதுக் குழு தலைவர் அலெக்சாண்டர் கொய்சாக் (Alexandre Coissac) தெரிவிக்கையில், இது ஈடுசெய்ய முடியாத பேரழிவு தரும் உயிரிழப்பு. தப்பியவர்களுக்கும், தங்களது அன்புக்குரியவர்களை இழந்த மற்றும் அவர்களைப் பற்றிய தகவல் தெரியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து எங்களது குழுவினர் களத்தில் அவசர நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். பொருளாதார வாய்ப்புகளைத் தேடி புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் உச்சகட்ட ஆபத்துகளை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செங்கடலில் உச்சகட்ட பரபரப்பு.. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் துறைமுக நகரம்..!!
தற்போது வரை மீட்கப்பட்ட 64 பேருக்கு ஒபோக் நகரில் உள்ள முகாமில் ஐ.ஓ.எம் அமைப்பு அவசர மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளை வழங்கி வரும் நிலையில், கடலில் மாயமான 116 பேரைத் தேடும் தீவிரப் பணியில் ஜிபூட்டி கடலோரக் காவல் படையினரும் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். ஆப்பிரிக்க கொம்புப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வறுமை, வேலையின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜிபூட்டி வழியாக பாப் எல்-மந்தேப் ஜலசந்தியைக் கடந்து ஏமன் நோக்கிப் பயணிப்பது வழக்கமாக உள்ளது.
ஏமனில் நிலவும் மோதல்கள், சட்டவிரோதக் கைதுகள் மற்றும் ஆட்கடத்தல் அச்சுறுத்தல்களையும் மீறி அகதிகள் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர். கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டுமே இந்தப் பாதையில் பயணித்த 900-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தும் மாயமாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!