தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரமாண்டமான கோட்டை செஞ்சி கோட்டை. இது தென்னிந்தியாவின் பெருஞ்சுவர் என்றும், கிழக்கின் ட்ரோய் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. 1200-இல் கோனார் வம்சத்தைச் சேர்ந்த அனந்த கோனால் இந்த கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. பின்னர், இவரது வழிவந்த கிருஷ்ண கோன் இதை விரிவுபடுத்தினார். சோழர் காலத்தில் "சிங்கபுரி" என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்னர் "செஞ்சி" என்று மருவியது. இந்தக் கோட்டை பல்வேறு ஆட்சியாளர்களான விஜயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், ஆற்காடு நவாபுகள், பிரஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இதை இந்தியாவின் மிகவும் கைப்பற்ற முடியாத கோட்டை என்று புகழ்ந்தார்.

ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க் ஆகிய மூன்று மலைகள் மற்றும் இரண்டு சிறிய குன்றுகளை இணைக்கும் 12 கி.மீ நீளமுள்ள மதில் சுவர்களால் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. 80 அடி அகலமுள்ள அகழிகள், 60 அடி உயரமுள்ள மதில்கள், செங்குத்தான மலைப்பகுதிகள் மற்றும் இயற்கையான காடுகளால் இது மிகவும் பாதுகாப்பான கோட்டையாக உள்ளது. 800 அடி உயரம் கொண்ட ராஜகிரி மலை மற்றும் கிருஷ்ணகிரி மலையில் அமைந்த கோட்டைகள் செங்குத்தான பணிகளோடு அமைந்துள்ளது. பிரெஞ்சு, டச்சு மற்றும் இந்திய கட்டிடக்கலை பாணிகளின் கலவையை இங்கு நம்மால் காண முடியும். தமிழ்நாட்டின் பண்பாட்டு மற்றும் வரலாற்று அடையாளமாக, கம்பீரமான கட்டமைப்பு, வரலாற்று முக்கியத்துவம், மற்றும் இயற்கையோடு இணைந்த அமைப்புடன் உள்ள செஞ்சிக் கோட்டை யுனெஸ்கோவின் உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடங்காத தீவிரவாதிகள்... சுட்டு வீழ்த்துவோம்! சூளுரைத்த இந்திய ராணுவம்
இதையும் படிங்க: #BREAKING “எல்லாத்தையும் கைப்பற்றிட்டாங்க...” - காலையிலேயே பகீர் கிளப்பிய ராமதாஸ் - டிஜிபியிடம் புகார்...!