டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய மாணவர் அமைப்புத் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இடைக்கால அரசின் தோல்விகளை மறைக்கவே இக்கொலை பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்த போராட்டங்களில் மாணவர் அமைப்புகள் பெரும் பங்காற்றின. அதில் முக்கிய தலைவராக விளங்கியவர் ஓஸ்மான் ஹாதி. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி டாக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் தீவிரமடைந்தன.
வங்கதேச போலீசார், ஹாதி கொலை அவாமி லீக் கட்சியின் உத்தரவின்படி அரசியல் பழிவாங்கலுக்காக நடத்தப்பட்டது என்று கூறியுள்ளனர். கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்ட பைசால் கரீம் மசூத் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள துரா நகரில் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதற்கு மசூத் மறுப்பு தெரிவித்து, தான் துபாயில் இருப்பதாகவும், கொலைக்கு தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வீடியோ வெளியிட்டார்.
இதையும் படிங்க: தேசத்துரோக வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு சிக்கல்! ஜனவரி 21ல் குற்றச்சாட்டு பதிவு!!

இந்நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "ஓஸ்மான் ஹாதியின் கொலை ஒரு துயரமான சம்பவம். ஆனால் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வி மற்றும் தேர்தல் வன்முறை காரணமாகவே இக்கொலை நடந்துள்ளது.
இதை வெளிநாட்டு சதி என்று கூறி அரசின் தோல்விகளை மறைக்க முயல்கின்றனர். ஹாதி கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தி பேசுவது முற்றிலும் ஆதாரமற்றது. இந்தியா வங்கதேசத்துடன் வர்த்தகம், ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி பிராந்திய நிலைத்தன்மைக்காக தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறது. யூனுஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை ஆபத்தானது" என்று கூறியுள்ளார்.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. அந்த அரசு நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிவிட்டதாக ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார். ஹாதி கொலை விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி மக்கள் கவனத்தை திசை திருப்ப முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த கொலை விவகாரம் வங்கதேச உள்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஷேக் ஹசீனா அளித்த விளக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: சொல்ல முடியாத துயரம்!! சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்!! ஷேக் ஹசீனா ஆவேசம்!