பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர், தற்போது பெரும் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "உரிய அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன்" என்று உறுதியளித்துள்ளார். இது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
2013 முதல் 2017 வரை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் இருந்து சுமார் 31,580 கோடி ரூபாய் கடன் பெற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) மற்றும் அதன் துணை நிறுவனங்கள், அந்த பணத்தை தவறான வழிகளில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பணம் திருப்பி செலுத்தப்படாமல், தொடர்புடைய நிறுவனங்கள், ஷெல் கம்பெனிகள் வழியாக திருப்பி அனுப்பப்பட்டதாகவும், மோசடி நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை (ED) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்!! இறுகும் அமலாக்கத்துறை பிடி! வெளிவருமா உண்மை?!
பிப்ரவரி 4-ம் தேதி உச்ச நீதிமன்ற விசாரணையின்போது, நீதிபதிகள் சிபிஐ மற்றும் ED-யின் தாமதத்தை கண்டித்தனர். பெரும் மோசடி வழக்குகளில் சிக்கிய தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பி செல்வது வழக்கமானது என்று சுட்டிக்காட்டி, அனில் அம்பானி நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, அனில் அம்பானி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோहतகி உறுதி அளித்திருந்தார்.

தற்போது (பிப்ரவரி 19, 2026) அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், "விசாரணை தொடங்கிய ஜூலை 2025 முதல் இதுவரை இந்தியாவை விட்டு வெளியேறவில்லை.
தற்போது வெளிநாடு செல்ல திட்டமோ எண்ணமோ இல்லை. எதிர்காலத்தில் அவசர தேவை ஏற்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்ற பிறகே செல்வேன்" என்று உறுதியளித்துள்ளார். மேலும், ED அழைப்பின் பேரில் பிப்ரவரி 26-ம் தேதி ஆஜராகி, முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு பொது நல மனுவாக (PIL) தொடரப்பட்டது. முன்னாள் அதிகாரி E.A.S. சர்மா தாக்கல் செய்த மனுவில், ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் ED-க்கு சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. அனில் அம்பானி தனது பதவி "நான்-எக்சிகியூட்டிவ் டைரக்டர்" மட்டுமே என்றும், நாள்தோறும் நிர்வாகத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த உறுதி மூலம், அனில் அம்பானி "தப்பி ஓடும் அபாயம் இல்லை" என்பதை நிரூபிக்க முயல்கிறார். ஆனால், வழக்கு தொடர்ந்து நீதிமன்ற கண்காணிப்பில் உள்ளது. பொதுமக்களிடையே இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி! யூஜிசி அளித்த புகார்! அல் பலாஹ் பல்கலை துணைவேந்தர் கைது!