புது டெல்லி: வங்கதேசத்தின் நேஷனல் சிட்டிசன் பார்ட்டி (NCP) தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான 'செவன் சிஸ்டர்ஸ்' (அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா) ஆகியவற்றை இந்தியாவில் இருந்து துண்டித்து, பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று சர்ச்சைக்குரிய பேச்சு நிகழ்த்தியதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச உயர்ஸ்தானிகர் எம். ரியாஸ் ஹமிதுல்லாவை மத்திய வெளியுறவு அமைச்சகம் டிசம்பர் 17 அன்று அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தது.
டாக்காவில் டிசம்பர் 15 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஹஸ்னத் அப்துல்லா, “இந்தியா வங்கதேச இறையாண்மையை மதிக்காத சக்திகளுக்கு (முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா) தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் பதிலடி கொடுக்கும். பிரிவினைவாத மற்றும் இந்தியா எதிர்ப்பு சக்திகளுக்கு ஆதரவு அளித்து, இந்தியாவின் செவன் சிஸ்டர்ஸ் மாநிலங்களை துண்டிப்போம்” என்று கூறினார். இப்பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களால் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, வங்கதேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கக் கோரி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஹஸ்னத் அப்துல்லாவின் பேச்சு இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு!! சென்னை வரும் பியூஸ் கோயல்! அதிமுக - பாஜக கூட்டணி அடுத்த மூவ்!

இப்பேச்சுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடும் பதிலடி கொடுத்தார். “இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் கொண்ட, அணு ஆயுதம் படைத்த மிகப்பெரிய நாடு. வங்கதேசம் இதைப்பற்றி கனவு காண்பதே தவறு. இது ஆபத்தானது மற்றும் யதார்த்தமற்றது” என்று அவர் கூறினார்.
மத்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச உயர்ஸ்தானிகரை அழைத்து, இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் கோரியது. மேலும், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் பாதுகாப்பு குறித்த கவலையும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Netflix-க்கே கைமாறுதா Warner Bros..?? Paramount-ன் பிரம்மாண்ட டீல் நிராகரிப்பு..!! வெளியான பரபரப்பு தகவல்..!!