நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கப்பட்ட போராட்டத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 26 நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டாலும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். இதனால் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் கவனம் பெற்றுள்ளது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தேர்வு நடைமுறை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அவரது போராட்டம் 21 நாட்களை கடந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நான் நல்லா இருக்கேன்!! பேரணியில் பங்கேற்கணும்! மருத்துவ அறிக்கைக்கு இடையில் அனுமதி கேட்கும் சோனம் வாங்சுக்!
இதற்கிடையில் மத்திய அரசின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக் பழச்சாறு அருந்தி தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதையடுத்து டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டமும் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

ஆனால், கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், சோனம் வாங்சுக் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவர்களுக்காக அவர் வெளிப்படுத்திய தியாகம் பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உயிர் மிக முக்கியமானது என்பதால் இந்த முடிவை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், நீட் விவகாரத்தில் அரசின் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்வதாகவும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்றும் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தக் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பதில் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அரசியலிலும் கல்வித் துறையிலும் தொடர்ந்து முக்கிய விவாதமாக நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: இன்றே உண்ணாவிரதத்தை முடிப்பார்..! சோனம் வாங்சுக் மனைவியின் பரபரப்பு அறிவிப்பு