தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகம் நடத்தும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது. இத்தேர்வில் மொத்தம் 8,27,475 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில் சுமார் 7.90 லட்சம் பள்ளி மாணவர்களும், 27,783 தனித்தேர்வர்களும் அடங்குவர்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள 281 கைதிகளும் இத்தேர்வை எழுதுகின்றனர். இது கல்வி அனைவருக்கும் என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறுகின்றன. சென்னை மாவட்டத்தில் மட்டும் 250 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 64,359 பள்ளி மாணவர்களும் 3,157 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர்.

இன்று முதல் நாள் தேர்வாக தமிழ் மற்றும் இதர மொழிகள் பாடத்தேர்வு நடைபெறுகிறது. இதனிடையே, மதுரை மாவட்டம் அல்லி குளத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத மாணவி துர்கா தேவி உறவினருடன் பைக்கில் சென்ற போது அரசு பேருந்து மோதியதை விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செய்முறை தேர்வுக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவனுக்கு இப்படியொரு நிலையா?... கதறி துடிக்கும் பெற்றோர்...!
விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவி துர்கா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து துர்கா தேவியின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைக்கேறிய மதுபோதை... 10ம் வகுப்பு மாணவி துடிதுடித்து பலி... கோர விபத்தால் நேர்ந்த கொடூரம்...!