சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் கன்னா கடந்த 13ம் தேதியும், மூத்த நீதிபதி அபய் எஸ்.ஓஹா கடந்த 24ம் தேதியும் ஓய்வு பெற்றனர். சஞ்சய் கன்னாவுக்கு பிறகு, புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பொறுப்பேற்றார். இந்நிலையில் புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக, தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் கடந்த திங்கட்கிழமை கூடியது.

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி என்.வி. அன்ஜாரியா, கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை ஐகோர்ட் நீதிபதி ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் குழு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை ஏற்று அவர்கள் மூவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் ரொம்ப ஆடக்கூடாது! அடக்கி பேசணும்.. எச்சரிக்கும் ஹெச்.ராஜா!

இதைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு 3 பேரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி அபய் எஸ். ஓகா, நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் ஓய்வுபெற்றதால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இப்போது மொத்தம் 34 நீதிபதிகள் உள்ளனர்.

நீதிபதி அன்ஜாரியா 1988ல் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கறிஞர் பயிற்சியை தொடங்கினார். நீண்ட அனுபவத்துக்கு பிறகு அதே ஐகோர்ட்டில் 2011ல் அவர் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013ல் நிரந்தர நீதிபதி ஆனார். கடந்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
நீதிபதி விஜய் பிஷ்னோய் 1989ல் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கறிஞர் பயிற்சயைத் தொடங்கி, அதே நீதிமன்றத்தில் 2013ல் கூடுதல் நீதிபதியாகவும், 2015ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு பிப்ரவரி 5ல் அவர் கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

நீதிபதி சந்துர்கர் 1988ல் வழக்கறிஞராக பதிவு செய்து மும்பை ஐகோர்ட்டில் வழக்குகளை நடத்தினார். 1992ல் நாக்பூர் சென்று அங்கு பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தினார். 2013ல் அவர் மும்பை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2016ல் நிரந்தர நீதிபதியானார்.
இதையும் படிங்க: பாஜக அரசுக்கு சம்மட்டி அடி.. அமலாக்கத்துறை அக்கப்போர்களுக்கு முடிவு.. குஷியான ஆர்.எஸ்.பாரதி..!