இந்தியாவின் முன்னனி ஐடி சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) செயல்பட்டு வருகிறது. அண்மையில் தான் இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2% பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இதனால் ஊழியர்கள் பலரும் நிறுவனத்தின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் புனேவில் டிசிஎஸ் அலுவலகம் முன்பு, ஒரு டிசிஎஸ் ஊழியர் நடைபாதையில் படுத்து உறங்கி போராட்டம் நடத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சௌரப் மோர் என்ற ஊழியர், கடந்த ஜூலை 29ம் தேதி முதல் புனேவின் ஹிஞ்சவாடி பகுதியில் உள்ள டிசிஎஸ் அலுவலகம் முன்பு நடைபாதையில் தங்கி உள்ளார். மேலும் இதற்கான காரணத்தையும் ஒரு கடிதமாக எழுதி அருகிலேயே வைத்திருக்கிறார். அதில் எனக்கு சம்பளம் வழங்காததால் நடைபாதையில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: TCS அறிவித்த அதிரடி பணி நீக்கம்.. சந்தை மதிப்பு ரூ.28,149 கோடி சரிவு..!!
இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அறிவித்திருந்த நிலையில் இந்த விவகாரம் மேலும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் இதற்கு பதிலளிக்கையில், சௌரப் மோர் என்ற அந்த ஊழியர் நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாமல் திடீரென விடுப்பு எடுத்து கொண்டதாகவும் மீண்டும் வந்து பணியில் சேராமல் தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைப்படி ஒரு ஊழியர் நிறுவன அங்கீகாரம் இல்லாமல் விடுப்பு எடுத்தால் அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி தான் இவரது சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டது என கூறியுள்ளது.

இது நிறுவனத்தின் வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும் அந்த ஊழியரை அழைத்து பேசி இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் ஐ.டி. துறையில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகள் குறித்து விவாதங்களை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: 12,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் TCS.. வெளியான பகீர் காரணம்..!!