தெலங்கானா மாநிலத்தில் வயதான பெற்றோர்களை கவனிக்காமல் விட்டுவிடும் அரசு ஊழியர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவர்களின் மாத சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், ‘பிரணாம்’ என்ற பெயரில் முதியோர்களுக்கான புதிய காப்பகங்களை திறந்து வைத்து பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த முடிவை அறிவித்தார். அவர் பேசியதாவது:
“வாழ்நாள் முழுவதும் சமூகத்துக்காக உழைத்து, குடும்பத்தை வளர்த்தெடுத்த பல முதியோர்கள் இன்று தங்கள் சொந்த பிள்ளைகளாலேயே கைவிடப்படுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெற்றோரை சரியாக பராமரிக்காதவர்கள் சமூகத்திற்கு எந்த நல்லதையும் செய்ய முடியாது.
இதையும் படிங்க: நாக்கை வெட்டிடுவேன்!! தெலுங்கானா சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆவேசம்!

இதைத் தடுக்கும் வகையில் மிக முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும். இந்த பணம் அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதற்கான சிறப்பு சட்டத்தை எதிர்வரும் மாநில பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவோம்” என்றார்.
மேலும், திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம் குறித்தும் அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வரும் உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் ஒரு திருநங்கையை நியமன உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் திருநங்கைகள் தங்கள் பிரச்சினைகளை உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாக எழுப்பி, தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்த அறிவிப்புகள் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக பெற்றோரை புறக்கணிப்பவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும் திட்டம், முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் குடும்ப பொறுப்பு குறித்து புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. பலரும் இந்த முடிவை வரவேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: விஷயமே வேற..! பராசக்தி படத்தில் கருத்து முரண்பாடு... குண்டை தூக்கி போட்ட MP விஜய் வசந்த்..!