உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி அன்று திறந்தது. மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார். 4,000 சதுர அடி பரப்பளவில், ஆப்பிள் ஸ்டோர் அருகே அமைந்துள்ள இந்த ஷோரூம், டெஸ்லாவின் இந்திய சந்தை நுழைவை குறிக்கிறது. இந்நிகழ்வில் டெஸ்லாவின் மாடல் Y மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ.60 லட்சம் முதல் ரூ.68 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று, (செப்டம்பர் 5) டெஸ்லா இந்தியாவில் தனது முதல் கார் விற்பனையை தொடங்கியது. முதல் டெஸ்லா மாடல் Y காரை மகாராஷ்டிர மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்னைக் வாங்கியுள்ளார். இந்த வெள்ளை நிற மாடல் Y காரை தனது பேரனுக்கு பரிசாக அளிக்கவிருப்பதாகவும், இதன் மூலம் மின்சார வாகனங்களின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். "மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பசுமை இயக்கத்தை மக்களிடையே பரப்ப விரும்புகிறேன்," என்று சர்னைக் கூறினார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! மும்பையின் பணக்கார விநாயகர் சிலைக்கு ரூ.474 கோடிக்கு காப்பீடா..!!
டெஸ்லாவின் மாடல் Y, இந்தியாவில் இரண்டு வகைகளில் கிடைக்கிறது: ரியர்-வீல் டிரைவ் (₹59.89 லட்சம்) மற்றும் லாங் ரேஞ்ச் ரியர்-வீல் டிரைவ் (₹67.89 லட்சம்). இது சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனமாகும். இந்தியாவில் இறக்குமதி வரி 20% குறைக்கப்பட்டதை அடுத்து, டெஸ்லா கார்கள் மிகவும் அணுகக்கூடிய விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்தியாவில் மின்சார வாகன சந்தை 4% மட்டுமே உள்ளது, ஆனால் 2030-க்குள் 30% ஆக உயர்த்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. டெஸ்லாவின் இந்த அனுபவ மையம், வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை அனுபவிக்கவும், டெஸ்ட் டிரைவ் செய்யவும் வாய்ப்பளிக்கிறது.

மும்பையில் நான்கு சூப்பர் சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் டெஸ்லா திட்டமிட்டுள்ளது. மும்பையைத் தொடர்ந்து, டெல்லியின் ஏரோசிட்டியில் இரண்டாவது ஷோரூம் திறக்கப்பட உள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய வாகன சந்தையில் டெஸ்லாவின் வருகை, மின்சார வாகன புரட்சிக்கு வலுவான தொடக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்... 13,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் பெருமிதம்