திருமலை ஏழுமலை ஸ்ரீ வேங்கடாசலபதி திருக்கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், பக்தர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் தனித்துவமான திருக்கோலங்களைக் கொண்ட நாளாக விளங்குகிறது. இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்தில் அருள்பாலித்து மாடவீதிகளில் வீதியுலா வருகிறார்.
இந்தக் காட்சி பக்தர்களுக்கு ஆன்மீக உணர்வை ஏற்படுத்தி, பிரபஞ்சத்தின் மாயை பற்றிய ஆழ்ந்த உண்மையை நினைவூட்டுகிறது.புராணக் கதையின்படி, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்தபோது அமுதம் தோன்றியது. அமுதத்தைப் பகிர்ந்து கொள்வதில் இரு தரப்பினருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது ஸ்ரீமன் நாராயணன் மோகினி என்ற அழகிய பெண் வடிவத்தை ஏற்று தோன்றினார். அவரது அழகிலும் நடனத்திலும் மயங்கிய அசுரர்கள் அமுதக் கலசத்தை அவருக்கு அளித்தனர்.
அதைப் பெற்ற மோகினி அமுதத்தை தேவர்களுக்கு வழங்கி அவர்களை அழியாமையுடன் வாழச் செய்தார். இந்தச் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் காலை மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறார்.இந்தத் திருக்கோலத்தில் சுவாமி பட்டுப் புடவையும், நவரத்தின ஆபரணங்களும் அணிந்திருக்கிறார். கழுத்தில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையும், ஒரு கையில் தங்கக்கிளியும் இடம்பெறுவது சிறப்பு. சங்கும் சக்கரத்திற்குப் பதிலாக தாமரை மலர்களை ஏந்தியவாறு அமர்ந்திருக்கும் இந்த வடிவம், லீலைகளால் நிறைந்த இறைவனின் மென்மையையும் அழகையும் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

உற்சவர் கோயிலுக்குள் இருந்தே பல்லக்கில் புறப்படுவது இந்த உற்சவத்தின் தனிச் சிறப்பு. மற்ற வாஹன சேவைகள் வாஹன மண்டபத்திலிருந்து தொடங்குவது வழக்கம். ஆனால் மோகினி அவதாரம் கோயிலின் உட்புறத்திலிருந்தே தொடங்கி மாடவீதிகளில் சுற்றி வருகிறது. அதே நேரத்தில் மற்றொரு பல்லக்கில் ஸ்ரீகிருஷ்ணர் உடன் வருவதும் பக்தர்களை மகிழ்விக்கிறது. இது பாற்கடல் கடைந்த காலத்தில் கிருஷ்ணனும் இணைந்திருந்ததை நினைவூட்டுவதாகக் கருதப்படுகிறது.மோகினி அவதாரத்தின் ஆன்மீகப் பொருள் ஆழமானது.
உலகம் முழுவதும் மாயையால் சூழப்பட்டிருப்பதையும், அந்த மாயையிலிருந்து விடுபட இறைவனை அடைவதே ஒரே வழி என்பதையும் இந்தத் திருக்கோலம் உணர்த்துகிறது. பக்தர்கள் இந்தக் காட்சியைக் கண்டு மனம் மயங்கி, உலக இச்சைகளைத் துறந்து பக்தியில் ஈடுபட வேண்டும் என்ற செய்தியை சுவாமி வழங்குகிறார். வீதி உலாவின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கலைக்குழுக்கள் நடனம், இசை, நாட்டுப்புறக் கலைகளை நிகழ்த்தி வீதிகளை நிறைக்கின்றன. இசைக்கருவிகளின் ஒலியும், பக்தர்களின் கோஷங்களும் கலந்து ஆலயச் சூழலை மேலும் புனிதமாக்குகின்றன.காலை உற்சவம் முடிந்த பிறகு மாலை நேரத்தில் கருட வாஹன சேவை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க.. மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு... சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு..!!