ஒருபுறம், அரிசி ஆலை உரிமையாளர்கள் தரமான அரிசியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அரிசியின் தரத்தை சோதிக்க அடிக்கடி திடீர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தினமும் காலை, மதியம், மற்றும் இரவு என மூன்று வேளைகளும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடத்தில் நாள்தோறும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான பக்தர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. இந்நிலையில் அன்னதானத்திற்காக கொள்முதல் செய்யப்படும் அரிசி குறித்து திருப்பதி தேவஸ்தானம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.
திருமலை பத்மாவதி ஓய்வு இல்லத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று அரிசி ஆலை உரிமையாளர்களுடன் திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி அரிசியின் தரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி தேவஸ்தானத்திற்கு அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அதிக சுவையான அரிசி பிரசாதம் கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "90% பாமாயில் கலப்படம்"... திருப்பதி நெய் சர்ச்சையில் உ.பி. நிறுவனத்தின் சதி அம்பலம்...!
அரிசி மாதிரியை எடுத்து, சமைத்து, முழுமையாகப் பரிசோதித்த பின்னரே சாதத்தை பக்தர்களுக்கு பரிமாற அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வெங்கையா சவுத்ரி அறிவுறுத்தியுள்ளார்.
அரிசி ஆலைகள் அரிசி விநியோகம் குறித்த மாதாந்திர அட்டவணையை தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதன் விளைவாக பக்தர்களின் தேவைக்கேற்ப திட்டமிட்ட ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகள் வாய்ப்பு பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
திருமலை, திருச்சானூர் மற்றும் பிற உள்ளூர் கோயில்களில் பிரசாதம் தயாரிக்க தேவஸ்தானம் தினமும் 20,000 கிலோ அரிசி பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த அரிசி ஆலைகள் 60:40 என்ற விகிதத்தில் தேவஸ்தானத்திற்க்கு அரிசி வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் அரிசி ஆலையாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாகவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகவும் சந்திப்பையும் நடத்துமாறு தேவஸ்தான அதிகாரிகளுக்கு வெங்கையா சவுத்ரி அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீவாரி சேவகர்கள் ஒவ்வொரு மாதமும் அன்ன பிரசாதத்தின் தரம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பக்தர்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அரிசியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி.. தீவிரவாத தாக்குதலா? 3 நாட்களுக்கு மூடப்படும் செங்கோட்டை...!