ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) 80வது பொதுச் சபைக் கூட்டம், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23, 2025) அமெரிக்காவின் நியூயார்க்கில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாட்டின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த முறை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துருக்கி அதிபர் ரெஜெப் தையிப் எர்டோகன், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமது அல் தானி உள்ளிட்டோர் தொடக்க உரையாற்றினர். டிரம்பின் உரை, ஐநாவை கடுமையாக விமர்சித்து, தனது 'போர்கள் நிறுத்தம்' பெருமிதத்தை மீண்டும் பதிவிட்டது, இது உலக தலைவர்களிடையே சலச்சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப், தனது 60 நிமிட உரையில், "ஏழு மாதங்களுக்குள் ஏழு போர்களை நான் முடிவுக்கு கொண்டுவந்துள்ளேன். அவை அனைத்தும் முடிவில்லா போர்களாக இருந்தன. 31 ஆண்டுகள், 36 ஆண்டுகள், 28 ஆண்டுகள் நீடித்த போர்கள்... பல லட்சம் பேர் இறந்தனர்" என்று தம்பட்டம் அடித்தார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே வழிதான்! கட் அண்ட் ரைட் ! ஐ.நா சொல்லும் தீர்வு!
அவர் குறிப்பிட்ட போர்கள்: கம்போடியா-தாய்லாந்து, கொசோவோ-செர்பியா, காங்கோ-ருவாண்டா, இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-ஈரான், எகிப்து-எத்தியோப்பியா, ஆர்மீனியா-அஜர்பைஜான். "வேறு ஏதும் ஜனாதிபதி அல்லது பிரதமர் இதைச் செய்யவில்லை. நான் மட்டும் 7 போர்களையும் நிறுத்தினேன். இதற்கு நான் பெருமைப்படுகிறேன்" என்று அவர் சொன்னார்.
இந்தப் பெருமிதத்தின் பின்னணியில், டிரம்ப் நோபல் அமைதி பரிசுக்கு தகுதியானவர் என்று தன்னைத் உயர்த்திக் காட்டினார். "ஐநா போர்களை நிறுத்தவில்லை. அது எந்த உதவியும் செய்யவில்லை. ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை. ஐநாவின் நோக்கம் என்ன? அதிகாரம் உண்டு, ஆனால் அது வெற்று வார்த்தைகளால் மட்டுமே இயங்குகிறது.
போர்களை நிறுத்துவது ஆக்கபூர்வமான செயல்கள் மூலம்தான்" என்று ஐநாவை கடுமையாகக் கண்டித்தார். ஐநாவின் செயல்பாடுகள் "கடினமான கடிதங்கள் எழுதுவதோடு" நின்றுவிடுவதாகவும், அது போர்களைத் தீர்க்காது என்றும் அவர் விமர்சித்தார்.

ரஷ்யா-உக்ரைன் போரைப் பற்றி பேசிய டிரம்ப், "இது எளிதானது என்று நினைத்தேன், ஆனால் இந்தியா, சீனா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்குவதால் போர் நீடிக்கிறது. அந்நாடுகள் ரஷ்யாவுக்கு நிதி வழங்குகின்றன. நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து மின்சாரம் வாங்குகின்றன. இது 2 வாரங்களுக்கு முன் தெரிந்தது.
ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால், அமெரிக்கா கடுமையான வரிகள் விதிக்கும். அது போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும்" என்று எச்சரித்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பில், உக்ரைன் தனது எல்லை முழுவதையும் மீட்டெடுக்க முடியும் என்றும், நேட்டோ உதவியுடன் வெற்றி பெறலாம் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போரைப் பற்றிய டிரம்பின் குறிப்பு, இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த மே மாதம் (மே 7-10, 2025) ஏற்பட்ட 4 நாட்கள் போரை அவர் "அமெரிக்க மத்தியஸ்தத்தால் நிறுத்தினோம்" என்று சொன்னார். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், "பாகிஸ்தான் கெஞ்சியதால் போரை நிறுத்தினோம். அமெரிக்காவின் பங்கு இல்லை. காஷ்மீர் பிரச்சினையில் 3வது நாட்டு மத்தியஸ்தம் விரும்பவில்லை" என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.
ஜூன் 18 அன்று டிரம்புடன் தொலைபேசியில் பேசிய மோடி, "எந்த மத்தியஸ்தமும் இல்லை" என்று மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியா, காஷ்மீரை உள்நாட்டு விவகாரமாகக் கருதி, சிம்லா ஒப்பந்தத்தின்படி இருது நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வழியாகத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
டிரம்பின் இந்தப் பேச்சு, நோபல் பரிசை மனதில் வைத்து செய்யப்பட்டது என்று உலக தலைவர்கள் கருதுகின்றனர். டிரம்பின் குறிப்புகள் உண்மையானதா என்பதை ஃபாக்ட்-செக்கிங் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. சில போர்கள் முழுமையாக நிற்கவில்லை, சிலவற்றில் அமெரிக்காவின் பங்கு குறைவு என்று அவை சுட்டிக்காட்டுகின்றன.
ஐநா பொதுச் சபை கூட்டத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர், ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதங்கள் தொடரும். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலன்ஸ்கி டிரம்பை மீண்டும் சந்திக்க உள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் விரைவில் உரையாற்ற உள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு இந்தியா ரொம்ப முக்கியம்!! மொத்தமாக சரணடைந்த அமெரிக்க அமைச்சர்!