முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சர்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அரசு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தவெக அரசு ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கும் என முதல்வர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமைச்சரவை கூட்டங்களிலும் அமைச்சர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்றும், அரசு நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக நிர்வாகிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் அமைச்சர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 2 நாட்களில் சாதிச் சான்று... ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு... சமூகநீதி துறை நடவடிக்கை..!!
கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சில நிர்வாகிகள், தங்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அரசு துறைகளில் பணியிட மாற்றம், அரசு சார்ந்த வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் பெற்றுத் தர வேண்டும் என அமைச்சர்களிடம் கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அரசு கட்டுமானப் பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் ஒப்பந்தங்களை பெறுவதற்காக அமைச்சர்களின் அலுவலகங்களை அணுகும் நிலையும் அதிகரித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சில தவெக அமைச்சர்கள் நிர்வாக ரீதியான அழுத்தங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஆட்சியில் இணைந்துள்ள கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் தவெக அமைச்சர்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறுகையில், கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் பல்வேறு பரிந்துரைகளை கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக அமைச்சர்களிடம் தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், ஒப்பந்தங்கள் மற்றும் அரசு பணிகளில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தவெக அரசு தனது ஆரம்ப கட்ட நிர்வாகத்தில் எடுக்கும் முடிவுகள், எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தவெக கூட்டணிக்குள் முதல் சலசலப்பு? நாஞ்சில் சம்பத் பேச்சால் வைகோ தரப்பு அதிருப்தி! விஜய் முடிவு என்ன?