பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் வேலை செய்வோரை குறிவைத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து வருகின்றன. ஹரியானாவில் யூ-டியூப் சேனல் நடத்தி வரும் ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. நாட்டின் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதன் மூலமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி வந்துள்ளார்.

அவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் மட்டும் அவர் உள்பட மொத்தம் 4 பேர் உளவு சொன்ன குற்றத்துக்காக கைதாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 2 பெண்கள், உத்தரப்பிரதேசத்தில் 6 பேர் என இதுவரை மொத்தம் 12 பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து உளவு சொன்ன குற்றச்சாட்டுகளில் கைதாகி இருக்கின்றனர். கைதான 12 பேரில் பெரும்பாலானவர்கள் டில்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் பழகி, பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம்..! இந்தியாவை எச்சரித்து கொக்கரிக்கும் பாக்., அதிகாரி..!

அங்கிருக்கும்போது பல வசதிகளை அனுபவித்திருக்கின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தகவல்களையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வரிசையில் இப்போது உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் வசிக்கும் மக்சூத் ஆலமின் மகன் துஃபைல் என்ற இளைஞரை அம்மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் தேச விரோத அமைப்புகள் உருவாக்கிய வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்ந்து துஃபைல் தகவல்கள் தந்துள்ளார்.

பேஸ்புக் மூலமும் இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் எண்களுக்கு தொடர்புகொண்டு அவர் பேசியிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-லப்பை என்ற பெயரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா ஷாத் ரிஸ்வியின் வீடியோக்களை துஃபைல் வாட்ஸ் குழுக்களில் பகிர்ந்திருக்கிறார். பாபர் மசூதி சம்பவத்துக்கு பழிவாங்கும் விதமாகவும், ஷரியா சட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்காகவும் கஸ்வா-இ-ஹிந்த் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அது தருகிற செய்திகளையும் துஃபைல் வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

ராஜ்காட், ஞானவாபி, ஜமா மசூதி, டில்லி செங்கோட்டை முதலான முக்கிய இடங்கள் தொடர்புடைய படங்கள் மற்றும் தகவல்களை பாகிஸ்தான் எண்களுடன் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்த ஆதாரங்களையும் கண்டுபிடித்து இருக்கின்றனர். பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்படுகின்ற இந்த குழுக்களுக்கான இணைப்பை வாரணாசியில் உள்ள பலருக்கும் துஃபைல் அனுப்பி இருக்கிறார். 600க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தொலைபேசி எண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்து உள்ளதும் புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் வசிக்கிற நஃபீசா என்ற பெண்ணுடன் துஃபைல் பேஸ்புக் மூலம் பேசி வந்துள்ளார். அவருடைய கணவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றுகிறார். துஃபைல் அந்த பெண் மூலம் தகவல்கள் தந்திருக்க கூடும் என்ற கோணத்திலும் உத்தர பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: இனியும் தீவிரவாதம் தொடர்ந்தால்.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பகிரங்க எச்சரிக்கை..!