அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் குறைந்து அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படும் என உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் மேற்காசிய பிராந்தியத்தில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
சமீப மாதங்களில் ஏற்பட்ட ராணுவ மோதல்களைத் தொடர்ந்து, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர் ஓமன் அருகே விபத்துக்குள்ளானது.
இதில் இருந்த விமானிகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஈரான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில், பதிலடி நடவடிக்கையாக ஈரானின் முக்கிய கடலோர பகுதிகள் மற்றும் சில உள்கட்டமைப்பு இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்! பஹ்ரைன் நோக்கி வந்த ஏவுகணைகளால் மக்கள் மரணபீதி!

இந்த தாக்குதலுக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே ஈரான் தனது பதிலடி நடவடிக்கையை தொடங்கியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம், குவைத்தில் உள்ள விமானப்படை தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ வசதிகளை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 21 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. மறுபுறம், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளிக்குள் நுழைந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் பலவற்றை இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளன.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் தாமதம் செய்து வருவதாகவும், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், மேற்காசிய வளைகுடா நாடுகளுக்கும் ஈரான் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தங்களது நிலப்பரப்பு அல்லது ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று அண்டை நாடுகளிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் ராணுவ தளம்!! வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா! போர் பதற்றம்!