உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கீர் கங்கா ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலும் அழிந்தன, மேலும் முழு கிராமமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் குறித்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. உத்தரகாண்ட் மாநில அரசு மற்றும் ராணுவம் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்காக மாநில அரசு நிவாரண முகாம்களை அமைத்துள்ளது.
இதையும் படிங்க: கேதார்நாத் யாத்திரையில் சோகம்.. நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள்..!
மேகவெடிப்பு மற்றும் கனமழை காரணமாக உத்தரகாண்டின் பல பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடர் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. விவசாய நிலங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்கு உறுதியளித்துள்ளன. இதுபோன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், உத்தரகாசியின் தாராலியில் நடந்த இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். உத்தர்காசி நிலைமை குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு உதவி வழங்குவதில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா-மணிலா இடையே நேரடி விமான சேவை.. பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு..!