தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டிக்கு மொத்தம் 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் விஜய் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என 4 பேர் தவெகவிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் மெஜாரிட்டி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்திருந்தாலும் எதிர்பார்த்த பெரும்பான்மையை எட்டித்தொட இன்னம் 2 தொகுதிகள் தேவை. இந்நிலையில் 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட விசிகவிடம் தவெக தலைமை கடிதம் மூலம் ஆதரவு கோரி இருந்தது.
இதுதொடர்பாக தனது கட்சியி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக அறிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தை நடத்தினர். அப்போது விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களின் விருப்பங்களை தெரிவித்தனர். அதுபற்றி விவாதம் நடத்தி திருமாவளவன் விஜய்யின் தவெகவை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் காலை 10 முதல் 11 மணிக்குள் செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னரே, அதிமுக மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெளிவாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அதிமுக சார்பில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பின்னர், அவர்கள் சென்னை மற்றும் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குதிரைப் பேரம் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!
இந்தச் சூழலில், விசிக இன்று எடுக்கும் முடிவு, விஜய் தலைமையிலான ஆட்சி அமைப்பிற்கான வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க வழங்கப்பட்ட அவகாசமும் நேற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று வெளியாகும் அரசியல் அறிவிப்புகள் தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!