கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கம். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகள் பிரச்சினைகளை எழுப்பி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் 1996 இல் தள்ளுபடி செய்துவிட்டது என்றும் எங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இந்து சமய அறநிலையத் துறை தான் முடிவு செய்யும் என்று தீர்ப்பளித்து விட்டது என்றும் தெரிவித்துள்ளது. பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் முடக்குவதற்கு ஆளுநர்களை பயன்படுத்தியது என்றும் அதற்குக் கடைசியாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அளித்தத் தீர்ப்பு முற்றுப் புள்ளி வைத்தது எனவும் கூறப்பட்டு உள்ளது.

ஆளுநரை இனி பயன்படுத்த முடியாது என்பதால் இப்போது நீதித்துறையை மோடி அரசாங்கம் தனது கருவியாக்க முயற்சிக்கிறது என்று கூறியுள்ள விசிக, நீதிபதி நியமனங்களில் தலையிட்டு ஆர் எஸ் எஸ், பாஜக ஆதரவு நபர்களை நீதிபதிகளாக நியமிப்பது., அவர்களைக் கொண்டு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கச் செய்வது என இந்த நாட்டை மிகவும் அபாயகரமான நிலையை நோக்கி மோடி அரசு நகர்த்திக் கொண்டுள்ளது என்றும் குற்றம்சாட்டி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வெற்றியா? அமித் ஷா முழக்கத்தில் சந்தேகத்தை கிளப்பிய திருமா…!
திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்க முயற்சிக்கும் மதவெறி சனாதன சக்திகளை முறியடித்துத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பது ஜனநாயக சக்திகளின் கடமை என்றும் மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்து உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!