புதுச்சேரி: உப்பளம் துறைமுக திடல் இன்று (டிசம்பர் 9) மாலை முழுவதும் “தளபதி… தளபதி…” கோஷத்தால் அதிர்ந்தது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தனது முதல் பெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, புதுச்சேரி மக்களை “என் நெஞ்சில் குடியிருப்பவர்கள்” என்று அழைத்து உருக்கமாகத் தொடங்கினார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே மேடை தீயாய் எரிந்தது – திமுக அரசுக்கு நேரடியாக சாட்டையை சுழற்றினார் விஜய்!
“மத்திய அரசுக்கு தமிழ்நாடு தனி, புதுவை தனி. ஆனால் நமக்கு நாம் வேறு வேறு கிடையாது. நாம் எல்லாம் சொந்தம் தான். பாரதி இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண் இந்தப் புதுவை. 1974-லேயே எம்ஜிஆர் இங்கே ஆட்சி அமைத்தார். தமிழகத்தில் அவரை மிஸ் செய்யாதீங்கன்னு எச்சரித்தது புதுவைதான். 30 வருஷமா என்னை தாங்கிப் பிடிக்கிற புதுவை மக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!” என்று உருக்கமாகப் பேசிய விஜய், திடீரென திமுக மீது பாய்ந்தார்.
“தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி புதுவை அரசு கிடையாது. வேறு கட்சி நடத்தும் அரசியல் நிகழ்ச்சி என்றாலும், புதுவை அரசு பாதுகாப்பு கொடுக்கிறது. புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கும், புதுவை அரசுக்கும் என் மனமார்ந்த நன்றி! இதைப் பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கற்றுக்க மாட்டாங்க… 2026-ல் மக்கள் கற்றுக்கொடுப்பாங்க!” என்று கர்ஜித்தார் விஜய். மைதானம் முழுவதும் பலத்த கைத்தட்டலும், “தளபதி… தளபதி…” கோஷமும் எழுந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன்., தொண்டர்கள் புடை சூழ விஜய் உரை…!

காலையில் நடந்த சிறு குழப்பத்தையும், போலீஸ் தடியடியையும் மறந்து, விஜய் மேடை ஏறியதும் மைதானம் கொண்டாட்டக் களமாக மாறியது. “விஜய் தமிழகத்துக்கு மட்டும் குரல் கொடுக்க மாட்டார்… புதுவைக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பார். அது என் கடமை!” என்று உறுதியளித்தார். உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களையும், கேரளா, கர்நாடக தமிழர்களையும் “நமது உறவு” என்று அரவணைத்துப் பேசினார்.
கரூர் பொதுக்கூட்ட சோகத்துக்குப் பிறகு விஜய் பேசும் முதல் பெரிய மேடை என்பதால், புதுச்சேரி முழுவதும் இளைஞர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். விஜய்யின் இந்த நேரடித் தாக்குதல், தமிழக அரசியல் களத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இது ஒரு முன்னோட்டமாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் “மக்கள் கற்றுக்கொடுப்பார்கள்” என்ற ஒரே வார்த்தை இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, திமுகவுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: தவெக பதில் சொல்லியே ஆகணும்! முண்டியடிக்கும் தொண்டர் கூட்டம்! உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!!