தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனி அணியாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனி அணியாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால், பல தொகுதிகளில் நான்கு முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானமாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜெயலலிதா ஆட்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இப்பகுதிகளில் தி.மு.க. மீண்டும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதையும் படிங்க: சீட் இல்லைங்க!! ரசிகர் மன்ற நிர்வாகிகளை கழட்டி விட முடிவு!! விஜயின் செயலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!
அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இம்மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் வலுவான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணக்கு போடுகிறார். இதற்காகவே தீவிர திட்டமிடல் நடைபெற்று வருகிறது.
த.வெ.க. தலைவர் விஜய், சட்டசபை தேர்தல் பணிகளை கண்காணிக்க முதன்மை தேர்தல் கண்காணிப்பாளர்களாக பொதுச்செயலர் ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை நியமித்துள்ளார்.

இதில் ஆதவ் அர்ஜுனாவுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் த.வெ.க. படைபலம், பணபலத்தை பயன்படுத்தி வெற்றி பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனாவை விஜய் களமிறக்கியுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் மூலம் இளைஞர்கள், அடித்தட்டு மக்களிடம் தீவிர பிரசாரம் நடத்த திட்டம் உள்ளது. சென்னை போன்ற நகர்ப்புற தொகுதிகளில் விஜய் ரசிகர்களின் ஆதரவு வலுவாக இருப்பதால், த.வெ.க. இங்கு பெரிய அதிரடி கொடுக்க முயல்கிறது.
நான்கு முனை போட்டி காரணமாக வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதால், தனி அணியாக வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளது. த.வெ.க.வின் இந்த வியூகம், சென்னை பகுதியில் தி.மு.க.வை சவாலுக்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தை அதிகரிக்க முயல்கின்றன. விஜய் தலைமையிலான த.வெ.க.வின் இந்த நகர்வு, தமிழக அரசியலை புதிய திசையில் திருப்பும் என பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெள்ளி, திங்கட்கிழமை எலெக்ஷன் வேணாம்!! தேஜ கூட்டணி கட்சிகள் வித்தியாச விருப்பம்! பரிசீலிக்குமா தேர்தல் ஆணையம்?!