இந்திய அரசியல்ல குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள் பத்தி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்ட புது அறிக்கை செம பரபரப்பை கிளப்பியிருக்கு. 27 மாநிலங்கள், மூணு யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சரவையோட 643 அமைச்சர்களோட தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆராய்ஞ்சு, 47% அமைச்சர்கள், அதாவது 302 பேர் மீது கிரிமினல் கேஸ் இருக்குனு ADR சொல்லுது.
இதுல 174 பேர் மீது கொலை, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மாதிரி சீரியஸ் கேஸ்கள் இருக்கு. இந்த அறிக்கை, பெரிய குற்றம் செஞ்சு 30 நாளுக்கு மேல காவலில் இருக்குறவங்க, முதலமைச்சரோ, பிரதமரோ கூட இருந்தாலும் பதவி பறிக்கப்படும்னு சமீபத்துல பார்லிமென்ட்டுல தாக்கல் ஆன மசோதாவுக்கு சில நாள்களுக்குப் பிறகு வந்திருக்கு. இந்த மசோதாவுக்கு அரசியல் கட்சிகள் செம எதிர்ப்பு காட்டிட்டு இருக்காங்க.
கட்சி வாரியா பாத்தா, திமுகவோட 31 அமைச்சர்கள்ல 87% (27 பேர்) மீது கிரிமினல் கேஸ் இருக்கு, இதுல 14 பேர் (45%) சீரியஸ் குற்றங்களை எதிர்கொள்ளுறாங்க. தெலுங்கு தேசம் கட்சி (TDP) 23 அமைச்சர்கள்ல 96% (22 பேர்) மீது கேஸ் இருக்கு. பாஜகவோட 336 அமைச்சர்கள்ல 40% (136 பேர்) மீது கேஸ் இருக்கு, இதுல 88 பேர் (26%) சீரியஸ் குற்றங்களை எதிர்கொள்ளுறாங்க.
இதையும் படிங்க: இந்தியாவின் டாப் 10 பணக்கார அமைச்சர்கள்!! தலைசுற்றும் சொத்து மதிப்பு!! அம்மாடியோவ்!!
காங்கிரஸோட 61 அமைச்சர்கள்ல 74% (45 பேர்) மீது கிரிமினல் கேஸ் இருக்கு, இதுல 18 பேர் (30%) சீரியஸ் கேஸ்களை எதிர்கொள்ளுறாங்க. திரிணமூல் காங்கிரஸ் (TMC) 40 அமைச்சர்கள்ல 33% (13 பேர்) மீது கேஸ் இருக்கு, இதுல 8 பேர் (20%) சீரியஸ் குற்றங்களை எதிர்கொள்ளுறாங்க. மத்திய அமைச்சரவையில 72 பேர்ல 40% (29 பேர்) மீது கிரிமினல் கேஸ் இருக்கு.
மாநில வாரியா பாத்தா, ஆந்திரா, தமிழ்நாடு, பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, ஹிமாச்சல், டெல்லி, புதுச்சேரி ஆகிய 11 மாநில சட்டசபைகள்ல 60% அமைச்சர்கள் மீது கிரிமினல் கேஸ் இருக்கு. ஆனா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து, உத்தராகண்ட் மாநிலங்கள்ல ஒரு அமைச்சர் மீது கூட கேஸ் இல்லை. ADR அறிக்கை, அமைச்சர்களோட சொத்து விவரங்களையும் வெளியிட்டு இருக்கு.

643 அமைச்சர்களோட மொத்த சொத்து மதிப்பு ₹23,929 கோடி, ஒரு அமைச்சரோட சராசரி சொத்து மதிப்பு ₹37.21 கோடி. கர்நாடகாவுல 8 பில்லியனர் அமைச்சர்கள், ஆந்திராவுல 6 பில்லியனர்கள் இருக்காங்க. முதல் இடத்துல TDP-யோட சந்திரசேகர் பெம்மாசானி (₹5,705 கோடி), ரெண்டாவது இடத்துல கர்நாடகாவோட டி.கே. சிவகுமார் (₹1,413 கோடி), மூணாவது இடத்துல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (₹931 கோடி) இருக்காங்க.
இந்த அறிக்கை, இந்திய அரசியல்ல செல்வமும் குற்றப் பின்னணியும் எப்படி கலந்திருக்குனு வெளிச்சம் போட்டு காட்டுது. 2002-ல ADR-ன் முயற்சியால, தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் கிரிமினல், நிதி, கல்வி விவரங்களை பிரமாணப் பத்திரத்துல தாக்கல் பண்ணுறது கட்டாயமாச்சு. ஆனாலும், குற்றப் பின்னணி உள்ளவங்க இன்னும் அரசியல்ல ஆதிக்கம் செலுத்துறது, ஜனநாயகத்தோட வெளிப்படைத்தன்மைக்கு சவாலா இருக்கு.
வேட்பாளர்கள் மீதான வழக்குகளை சீக்கிரம் விசாரிக்க விசேஷ நீதிமன்றங்கள், கடுமையான தகுதி நீக்க விதிகள், வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வேணும்னு ADR சொல்றது. அரசியல் கட்சிகள் நேர்மையை விட வெற்றி வாய்ப்பை முன்னுரிமைப்படுத்துற போக்கை இந்த அறிக்கை கடுமையா விமர்சிக்குது.
இதையும் படிங்க: மோடியுடனான நட்பு முடிஞ்சுபோச்சு! மோதல்தான் இருக்கு! ட்ரம்பை நம்பி ஏமாறாதீங்க!