சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியுள்ளார்.
இந்தியாவில் கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1931ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர், 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சமூக - பொருளாதார கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்பட்டது. ஆனால், அதன் தரவுகள் கடைசி வரை வெளியிடப்படவில்லை. 2021இல் இந்தியாவில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்றால் அது ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு மாநில அரசுகளும் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி வந்த
நிலையில், இனி நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. காங்கிரஸ், திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையை ஏற்றுள்ளது மத்திய அரசு. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லையில் எல்லாம் ரெடி... மோடி கண் அசைவுக்கு காத்திருக்கும் ராணுவம் - பீதியில் பாகிஸ்தான்!

இந்தநிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. நாடாளுமன்றத்தை உடனே கூட்டுங்க.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!