தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் முன்வந்ததாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவிக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார் என்பதை அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அமைச்சர் ராஜ்மோகன் பேசியது என்ன?
கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் உள்ள எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார்.
இதையும் படிங்க: விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!
அப்போது முதலமைச்சர் விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட அவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி மூலமாக ஒருவர் தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தந்தால் அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தருவதாக அந்த நபர் தெரிவித்ததாக லயோலா மணி தன்னிடம் கூறியதாக அவர் பேசினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், "500 கோடி ரூபாய் கொடுத்தாலும் தகுதியற்ற ஒருவருக்கு இந்தப் பதவியை வழங்க முடியாது. முதலமைச்சர் விஜய் தகுதியான நபருக்கே பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்தப் பதவிக்குத் தகுதியான நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு ஒரு ரூபாய் கூடப் பெற்றுக்கொள்ளாமல் பதவி வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் தனக்கும் லயோலா மணிக்கும் மட்டுமே தெரியும் என்றும், இதுவரை வெளியில் கூறியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக தரப்பில் எழுந்த எதிர்ப்பு:
அமைச்சரின் இந்தப் பேச்சுக்குத் திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் முன்வந்ததாக அமைச்சரே பொதுமேடையில் தெரிவித்துள்ள நிலையில், அந்த நபர் யார் என்பதை ஏன் வெளிப்படுத்தவில்லை என்றும், அவர் மீது ஏன் உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இதையடுத்து, திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அதிமுக இன்பதுரை அதிரடி கேள்வி:
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ₹5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதை முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
லஞ்சம் கொடுக்க முயன்றவரின் அடையாளத்தை மறைப்பது குற்றம். ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(3)-ன் கீழ் அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தின் உணர்வுக்கும், அமைச்சரின் பொறுப்புக்கும் ஏற்புடையதாகும்.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் இப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: “வாய் மட்டும் தான் வேலை செய்யுது மத்தது எல்லாம்"..! விஜயை பங்கமாய் கலாய்த்த இபிஎஸ்..!!