ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்தப்படியாக செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது கோபிச்செட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்தார். விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தவெக வில் இணைந்த பிறகும் ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்திருப்பதுடன் தனது அலுவலக பெயர் பலகையில் விஜய் படத்துடன் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பயன்படுத்தியிருப்பது போன்ற செயல்கள் அதிமுகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது என்றும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டினர்.
அப்போது, “அதிமுகவே வேண்டாம் என்ற பிறகு ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களை சூடு சொரணை இருந்தால் பயன்படுத்த கூடாது” சிவகங்கை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளரான மணிமாறன் என்பவர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியது பரபரப்பைக் கிளப்பியது. தற்போது மீண்டும் செங்கோட்டையனுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: "சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்வியே மிஞ்சும்" - நயினார் நாகேந்திரன் சாடல்...!
அரசியல் அங்கீகாரம் தந்த அதிமுகவிற்கு துரோகம் செய்ததாக செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக மாணவரணியை சேர்ந்த மணீஸ் சென்ற முருகன் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் “செங்கோட்டையாவது... மாங்கொட்டயாவது...” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. பரமக்குடி பேருந்து நிலையம், ஐந்துமுனை, ஓட்டப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கோட்டையனுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் மாவட்டந்தோறும் போஸ்டர்கள் ஒட்டினர். கொங்கு மண்டலத்தில் ஓ.பி.எஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாக சாடியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தன. தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை டார்க்கெட் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!