தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் அண்ணா அறிவாலயத்தில் களைகட்டியுள்ளன. இன்று, பசும்பொன் பாண்டியன் தலைமையிலான அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அதிமமுக) முக்கிய நிர்வாகிகள், திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகனைச் சந்தித்துத் தங்களது தேர்தல் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஆல்பர்ட் கூறியதாவது, பசும்பொன் பாண்டியன் தலைமையில் இயங்கும் அதிமமுக, கடந்த ஏழு ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. பாசிசத்தை எதிர்க்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, எங்கள் கட்சியின் சார்பில் 9 உத்தேசத் தொகுதிகள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்துள்ளோம். இதில் எங்களுக்குக் குறைந்தபட்சம் 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இதையும் படிங்க: சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!
எங்களது கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும், விரைவில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளரை அழைத்துத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் திமுக தரப்பில் பூச்சி முருகன் உறுதி அளித்துள்ளார்" என ஆல்பர்ட் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இதர சிறிய கட்சிகள் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிமமுக-வின் இந்த 3 தொகுதிகள் கோரிக்கை தென் மாவட்ட அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் எதிரொலி: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 53 ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்!