தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் தேமுதிகவை உடனடியாக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனிசாமி இந்த வாய்ப்பை நழுவ விடுவதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு தேமுதிக கூட்டணி மிக முக்கியமானது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., தமாகா உள்ளிட்ட கட்சிகள் தனியாக போட்டியிட்டன. அப்போது அதிமுகவுக்கு ஆதரவாக நின்றது தேமுதிக மட்டுமே. இதனால் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம் போன்ற சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியை விட அதிக வாக்குகளை அதிமுக பெற்றது. சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் 2021 சட்டமன்ற தேர்தலை விட 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் வாக்குகள் கிடைத்தன.
பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேமுதிகவின் ஆதரவு அதிமுகவுக்கு பெரும் பலம் தரும் என மாவட்ட செயலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மகனுக்காக முட்டி மோதிய பிரேமலதா! பிடிகொடுக்காத எடப்பாடி! தேஜ கூட்டணி கேட் க்ளோஸ்! தேமுதிக நிலை?!

வழக்கமாக முன்னாள் அமைச்சர் தங்கமணி போன்ற மூத்த தலைவர்கள் தான் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு நடத்துவர். ஆனால் இம்முறை சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவனை வைத்து பழனிசாமி பேசி வருவதாகவும், இதனால் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வராமல் நழுவ விடுவது தெரிவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் தாமதிக்காமல் பழனிசாமி நேரடியாக தேமுதிக தலைமையுடன் பேச வேண்டும் என்று மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது அதிமுக பா.ஜ.க. உடன் கூட்டணி முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தேமுதிகவுடன் உறுதியான ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் இருப்பது கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தேமுதிகவின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு முக்கியமானது என்பதால், இந்த கூட்டணி தேர்தல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் உள் அதிருப்தி தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. கட்சியின் அடித்தள தொண்டர்கள் மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்கள் பழனிசாமியின் கூட்டணி உத்தியை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பிரச்சினை கட்சியை பலவீனப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி தலைமையை ஏற்க மாட்டோம்!! அதிமுக - பாஜக கூட்டணி கனவுக்கு வேட்டு வைக்கும் அமமுக!!